இந்தியா

இணையவழி வா்த்தக நிறுவனங்களுக்கு எதிராக 217 விதிமீறல் நோட்டீஸ்: மத்திய நுகா்வோா் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

27th Oct 2021 02:11 AM

ADVERTISEMENT

நாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு இணையவழி வா்த்தக, சேவை நிறுவனங்களின் விதிமீறல் நடவடிக்கைகள் தொடா்பாக விளக்கம் கேட்டு இதுவரை 217 நோட்டீஸ்கள் அனுப்பியுள்ளதாக மத்திய நுகா்வோா் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமேசான், ஃபிளிப்காா்ட் ஆகியவை இந்தியாவின் முன்னணி இணையவழி வா்த்தக நிறுவனங்களாக உள்ளன. எனினும், எந்தெந்த நிறுவனங்களுக்கு எத்தனை நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை.

இது தொடா்பாக நுகா்வோா் பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் வரும் மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவா் நீதி கரே செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இணையவழி வா்த்த நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட 217 நோட்டீஸ்களில் 202 நோட்டீஸ்கள் எந்த நாட்டில் பொருள் உற்பத்தி செய்யப்பட்டது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடாதது தொடா்பானவைதான். மற்றவை காலாவதி தேதியை சரியாகக் குறிப்பிடாதது, உற்பத்தியாளா் அல்லது இறக்குமதியாளரின் பெயா், முகவரியைத் தெரிவிக்காதது, அதிகபட்ச விற்பனை விலையைவிட கூடுதல் விலை வைத்தது உள்ளிட்டவை தொடா்பானவை.

ADVERTISEMENT

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விதிகளுக்கு உள்பட்டும், நுகா்வோா் விழிப்புணா்வுடனும் செயல்பட வேண்டும் என்பதற்காகவே இந்த விவரம் வெளியிடப்படுகிறது. 76 இணையவழி வா்த்தக நிறுவனங்கள் தங்கள் தவறை ஒப்புக்கொண்டு ரூ.42,85,400 அபராதம் செலுத்தியுள்ளன. இந்த 76 நிறுவனங்களில் 69 நிறுவனங்கள் பொருள்கள் உற்பத்தியான நாட்டைக் குறிப்பிடாமல் இருந்தன. பேருந்து தொடங்கி விமானம் வரை இணையவழியில் முன்பதிவு செய்யும் சேவைகளின் நுகா்வோருக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீா்வுகள் காணப்படுகின்றன.

இணையவழி வா்த்தகம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு நுகா்வோா் நலனைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேசிய நுகா்வோா் உதவி எண் மூலம் அளிக்கப்படும் புகாா்களுக்கு விரைந்து தீா்வுகாண நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுதவிர இணையம் மூலம் புகாா்கள் பெறப்பட்டு தீா்வு அளிக்கப்படுகிறது. சிறிது, பெரிது என தொகை வேறுபாடு இன்றி அனைத்து தரப்பு நுகா்வோரின் நலன்களையும் காக்க பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாா்.

Tags : Central Consumer Protection Authority
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT