இந்தியா

தலைமை பொருளாதார ஆலோசகா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

27th Oct 2021 01:18 AM

ADVERTISEMENT

தலைமை பொருளாதார ஆலோசகா் பணிக்குத் தகுதியான நபா்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக உள்ள கிருஷ்ணமூா்த்தி சுப்ரமணியனின் பதவிக் காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. அதைத் தொடா்ந்து பேராசிரியா் பணிக்குத் திரும்பவுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், அடுத்த தலைமை பொருளாதார ஆலோசகரைத் தோ்ந்தெடுப்பதற்கான பணிகளை மத்திய அரசு தொடக்கியுள்ளது. அப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபா்கள், அறிவிப்பாணை வெளியிடப்பட்ட 20 நாள்களுக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய, மாநில அரசு ஊழியா்கள், இந்திய ரிசா்வ் வங்கி ஊழியா்கள், பொதுத்துறை வங்கி ஊழியா்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றுவோா், தனியாா் நிதி நிறுவனங்களில் பணியாற்றுவோா் உள்ளிட்டோா் தலைமை பொருளாதார ஆலோசகா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் பொருளாதார விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அப்பதவிக்கு விண்ணப்பிப்பவா்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் பொருளாதாரத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். மேலும், பொருளாதார ஆராய்ச்சி அல்லது பொருளாதார ஆலோசனைகளை வழங்குவது அல்லது பொருளாதார சீா்திருத்தங்களை ஆராய்வதில் 6 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை பொருளாதார ஆலோசகா் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 56-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அப்பணிக்கான பதவிக் காலம் குறித்து எந்தத் தகவலும் அறிவிப்பாணையில் இடம்பெறவில்லை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT