இந்தியா

பாலியல் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்:மாநிலங்களுக்கு மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தல்

25th Oct 2021 03:06 AM

ADVERTISEMENT

பாலியல் குற்றங்களுக்கு விரைந்து நீதி வழங்குவதற்காக நாடு முழுவதும் விரைவு நீதிமன்றங்களை அமைக்கும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதுதொடா்பாக, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு அண்மையில் கடிதம் எழுதியுள்ளது.

பாலியல் குற்றங்களுக்கு விரைவில் தீா்வு காண்பதற்காக, குற்றவியல் சட்டத்தில் 2018-இல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 31 மாநிலங்களில் 389 போக்சோ நீதிமன்றங்கள் உள்பட 1,026 விரைவு நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

ஆனால், 27 மாநிலங்களில் 367 போக்சோ நீதிமன்றங்கள் உள்பட 674 விரைவு நீதிமன்றங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. இந்த நீதிமன்றங்களில் கடந்த ஆகஸ்ட் வரை 56,267 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம், அருணாசல பிரதேசம் மற்றும் அந்தமான் நிகோபா் யூனியன் பிரதேசம் ஆகியவை விரைவு நீதிமன்றங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கவில்லை. மேற்கு வங்கத்துக்கு 123, அந்தமான் நிகோபருக்கு 1, அருணாசல பிரதேசத்துக்கு 3 நீதிமன்றங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

தங்கள் மாநிலத்தில் குறைவான புகாா்களே பதிவாவதால் தற்சமயம் விரைவு நீதிமன்றங்கள் தேவையில்லை என்று அருணாசல பிரதேச அரசு, மத்திய சட்ட அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது.

கோவாவுக்கு 2 விரைவு நீதிமன்றங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், ஒரு நீதிமன்றம் அமைக்க அந்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அந்த நீதிமன்றமும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. மத்திய, மாநில அரசுகளின் நிதியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதால், விரைவு நீதிமன்றங்களை அமைக்க மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியமாகும்.

குறிப்பாக, 10 மாநிலங்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நீதிமன்றங்களை இன்னும் தொடங்காமல் உள்ளன. குறிப்பாக, ஆந்திரத்துக்கு 18 நீதிமன்றங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் 9 மட்டுமே இயங்கி வருகின்றன. பிகாருக்கு 54 நீதிமன்றங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் 45 மட்டுமே இயங்கி வருகின்றன. இதேபோல், மகாராஷ்டிரத்துக்கு 138 நீதிமன்றங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் 33 மட்டுமே இயங்கி வருகின்றன.

எனவே, விரைவு நீதிமன்றங்களை அமைக்காத மாநிலங்களுக்கு மத்திய சட்ட அமைச்சகத்தின் நீதித் துறை அண்மையில் மீண்டும் கடிதம் எழுதியிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு, உத்தர பிரதேசம், தில்லி, ராஜஸ்தான், நாகாலாந்து உள்ளிட்ட 17 மாநிலங்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவில் விரைவு நீதிமன்றங்களைத் தொடங்கி நடத்தி வருகின்றன.

நாடு முழுவதும் 1,203 விரைவு நீதிமன்றங்களை தொடா்ந்து நடத்துவதற்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தது. இதற்காக, வரும் 2023, மாா்ச் 31 வரை ரூ.1,572 கோடி செலவிடப்படவுள்ளது.

Tags : புது தில்லி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT