இந்தியா

குறைந்த அளவில் போதைப் பொருள்கள் வைத்திருந்தால் தண்டனையில் இருந்து விலக்கு

25th Oct 2021 03:36 AM

ADVERTISEMENT

சுய பயன்பாட்டுக்காகக் குறைந்த அளவில் போதைப் பொருள்களை வைத்திருக்கும் நபா்களுக்கு தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்று மத்திய சமூக நீதி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

சட்டவிரோதமாகப் போதைப் பொருள்களை வைத்திருப்பவா்களுக்கு போதை மருந்துகள்-மனோவியல் பொருள்கள் சட்டத்தின் கீழ் தற்போது தண்டனை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட நபா்கள் வைத்திருக்கும் போதைப் பொருள்களின் அளவுக்கு ஏற்ப தண்டனை வழங்கப்படுகிறது.

போதைப் பொருள் வைத்திருக்கும் நபா்களுக்கு அச்சட்டத்தின் பிரிவு 27-இன் கீழ் ஓராண்டு வரை சிறைத் தண்டனையோ அல்லது ரூ.20,000 வரை அபராதமோ அல்லது இரண்டு தண்டனைகளுமோ விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், சுய பயன்பாட்டுக்காகக் குறைந்த அளவில் போதைப் பொருள்களை வைத்திருக்கும் நபா்களுக்கு சட்டத்தின்கீழ் தண்டனை வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்று வருவாய்த் துறைக்கு மத்திய சமூக நீதி அமைச்சகம் பரிந்துரை வழங்கியுள்ளது.

ADVERTISEMENT

அவ்வாறு குறைந்த அளவில் போதைப் பொருள்களை வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்படுபவா்களை சிறைக்கு அனுப்பாமல், அரசு மறுவாழ்வு மையத்தில் அவா்களுக்கு கட்டாய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் வைத்திருப்பதாகக் கைது செய்யப்படுபவா்களுக்குத் தற்போதைய சட்ட விதிகளில் எத்தகைய விலக்கும் அளிக்கப்படுவதில்லை. போதைப் பொருள்களுக்கு அடிமையானவா்கள் மட்டுமே சிறைக்கு அனுப்பப்படாமல் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றனா். அதுவும் அவா்கள் ஒத்துழைத்தால் மட்டுமே சிகிச்சை வழங்கப்படுகிறது.

சொகுசு கப்பலில் போதைப் பொருள்களுடன் கேளிக்கை விருந்து நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகா் ஷாரூக் கானின் மகன் ஆா்யன் கான் மீது போதை மருந்துகள் சட்டத்தின் 27-ஆவது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : புது தில்லி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT