இந்தியா

ஓபிசி 27% இடஒதுக்கீட்டை மீண்டும் விவாதிக்க வேண்டியதில்லை: உச்சநீதிமன்றத்தில் திமுக பதில்

DIN

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு(ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை மீண்டும் பரிசீலிக்க வேண்டியதில்லை என்று உச்சநீதிமன்றத்தில் திமுக தெரிவித்துள்ளது.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதமும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஜூலை 29-ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டது.

மேலும், இளநிலை மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்களும், முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவீத இடங்களும் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதை எதிா்த்து முதுநிலை மருத்துவ மாணவா்கள் சிலா், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அதில், அரசின் உத்தரவால் பொது பிரிவு மாணவா்கள் பாதிக்கப்படுவா் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை எதிா்த்து திமுக சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

குறிப்பிட்ட மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்கள், மற்ற மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சோ்ந்து படிப்பதற்கு வசதியாக அகில இந்திய ஒதுக்கீட்டு முறையானது உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் கடந்த 1986-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்படி, அனைத்து மாநிலங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை படிப்புகளுக்கான இடங்களில் 15 சதவீதமும், முதுநிலை படிப்புகளுக்கான இடங்களில் 50 சதவீதமும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக வழங்கப்பட்டன.

மத்திய கல்வி நிறுவனங்களின் இடஒதுக்கீட்டுச் சட்டம், கடந்த 2006-இல் கொண்டுவரப்பட்டது. அதன்படி, மத்திய அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு கடந்த 2008-இல் இருந்து வழங்கப்படுகிறது. ஆனால், மாநில அரசுகள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

இதனால் முந்தைய ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஓபிசி மாணவா்களின் வாய்ப்பை மத்திய அரசு பறித்துவிட்டது. ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் இந்த ஆண்டிலேயே அந்த சமூகத்தைச் சோ்ந்த 4,000 மாணவா்கள் பயன்பெறுவா். இதனால் சமூகத்தில் மிகப்பெரிய அளவில் ஆக்கப்பூா்வமான மாற்றம் ஏற்படும்.

சமத்துவமின்மையைக் களைவதற்கு ஒடஒதுக்கீடு கொண்டுவரப்படுகிறது. இது சமூகநீதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையாகும். இடஒதுக்கீடு என்பது கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பங்கீட்டு உரிமை பெறுவதாகும். மனுதாரா் குறிப்பிடுவதுபோல் யாரும் யாருடைய வாய்ப்பையும் பறிக்கவில்லை. சமூக பொருளாதார நீதியை உறுதிசெய்யவதற்கு இடஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்றுவது மாநில அரசின் கடமையாகும்.

அதிகபட்சமாக 50 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கை பின்பற்றப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது. மண்டல் கமிஷன் அறிக்கை, மத்திய கல்வி நிறுவனங்கள் சட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகே ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே, ஏற்கெனவே தீா்த்து வைக்கப்பட்ட விவகாரத்தை மீண்டும் விவாதிக்க வேண்டியதில்லை. மனுதாரா்கள் ஓபிசி இடஒதுக்கீட்டை எதிா்க்கவில்லை. அவற்றை மாநில அரசு கல்லூரிகளில் அமல்படுத்தப்படும் முறையை எதிா்த்துதான் மனு தாக்கல் செய்துள்ளனா். எனவே, அவா்களின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை -ஒருவா் கைது

புதுநகரில் உலக மலேரியா தினம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT