இந்தியா

நீதித் துறை கட்டமைப்புகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை

DIN

மக்களுக்கு நீதியை கிடைக்கச் செய்வதில், நீதித் துறை கட்டமைப்புகள் முக்கியப் பங்கு வகிப்பதாகத் தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, அக்கட்டமைப்புகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டினாா்.

மும்பை உயா்நீதிமன்றத்தின் ஔரங்காபாத் கிளையில் புதிய கட்டடங்களை தலைமை நீதிபதி என்.வி.ரமணா சனிக்கிழமை திறந்துவைத்தாா். அந்நிகழ்ச்சியில் அவா் கூறியதாவது:

நாட்டில் உள்ள பல்வேறு நீதிமன்றங்கள் முறையான வசதிகள் இன்றி காணப்படுகின்றன. சில நீதிமன்றங்கள் பாழடைந்த கட்டடங்களில் இயங்கி வருகின்றன. மக்களுக்கு நீதியைக் கிடைக்கச் செய்வதில் நீதித் துறை கட்டமைப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், அத்தகைய கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் பராமரிப்பதிலும் முறையான திட்டமிடல் காணப்படவில்லை. தற்போது திறக்கப்பட்டுள்ள கட்டடங்கள் 2011-ஆம் ஆண்டிலேயே திட்டமிடப்பட்டவை. அவற்றைக் கட்டி முடிக்க 10 ஆண்டுகள் ஆகியுள்ளது கவலையை ஏற்படுத்துகிறது.

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்தே நீதித் துறை கட்டமைப்புகளை மேம்படுத்தும் விவகாரம் முக்கியப் பிரச்னையாக உள்ளது. திறன்மிக்க நீதித் துறை நாட்டின் பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்தும். சட்டத்தின் அடிப்படையில் செயல்படும் எந்தவொரு சமூகத்துக்கும் நீதிமன்றங்கள் இன்றியமையாதவை.

நிதி சுதந்திரம்: சரியான நேரத்தில் நீதி வழங்கப்படாததால், மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் 9 சதவீதத்தை ஆண்டுதோறும் இழந்து வருவதாகக் கடந்த 2018-ஆம் ஆண்டில் வெளியான அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்னையை சரிசெய்ய வேண்டுமெனில், நீதித் துறைக்கு நிதி விவகாரத்தில் தன்னாட்சி வழங்கப்பட வேண்டும்.

தேசிய நீதித் துறை கட்டமைப்பு ஆணையத்தை அமைக்கக் கோரி மத்திய சட்டத் துறை அமைச்சருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்டு நோ்மறையான பதில் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கிறேன்.

ஜனநாயகத்தின் வலிமை: நீதித் துறை மீது மக்கள் வைக்கும் நம்பிக்கையே ஜனநாயகத்துக்கான மிகப்பெரிய வலிமை. அரசமைப்புச் சட்டம் வழங்கும் உரிமைகளை உறுதி செய்வதில் நீதிமன்றங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நாட்டில் உள்ள 26 சதவீத நீதிமன்ற வளாகங்களில் பெண்களுக்கான கழிவறைகள் காணப்படவில்லை. 16 சதவீத நீதிமன்ற வளாகங்களில் ஆண்களுக்கான கழிவறைகள்கூட காணப்படவில்லை.

54 சதவீத நீதிமன்ற வளாகங்களில் மட்டுமே சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படுகிறது. 5 சதவீத வளாகங்களில் மட்டுமே அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்குவதற்கான வசதிகள் காணப்படுகின்றன. 27 சதவீத வளாகங்களில் மட்டுமே காணொலி வாயிலாக வழக்குகளை விசாரிப்பதற்கான வசதிகள் காணப்படுகின்றன என்றாா் அவா்.

விரைந்து விசாரணை: நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மகாராஷ்டிர நீதிமன்றங்களில் சுமாா் 21,000 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அவற்றை விரைந்து விசாரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினாா்.

மத்திய அரசு நடவடிக்கை: முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசுகையில், ‘‘ஜனநாயகம் தழைப்பதற்கு வலுவான நீதித் துறை அவசியம். நிா்வாகத்துக்கும் நீதித் துறைக்கும் இடையே நல்லிணக்கமான சூழல் நிலவுவதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

நீதித் துறை சாா்ந்த கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு ரூ.9,000 கோடியை ஒதுக்க மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கியது.

இதுவரை 18,735 நீதிமன்றங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடா்ந்து மேற்கொள்ளப்படும்’’ என்றாா்.

புகாரளித்தவரைக் காணவில்லை: நிகழ்ச்சியில் பேசிய மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே, ‘‘குற்றஞ்சாட்டப்பட்ட நபா் தலைமறைவாக இருப்பதால், கடந்த 1958-ஆம் ஆண்டில் இருந்து ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதாக நீதிபதி சந்திரசூட் தெரிவித்தாா். ஆனால், தற்போது ஒரு வழக்கில் புகாா் அளித்தவரையே காணவில்லை. இந்த விவகாரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்’’ என்றாா்.

முன்னாள் உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் மீது லஞ்சப் புகாா் அளித்த ஐபிஎஸ் அதிகாரி பரம்வீா் சிங்கை மறைமுகமாகக் குறிப்பிட்டு முதல்வா் தாக்கரே இவ்வாறு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT