பெண் ராணுவ அதிகாரிகள் 39 பேருக்கு நிரந்தர பணிக்கான ஆணையை 7 நாள்களுக்குள் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ராணுவத்தில் குறுகிய கால பணி அடிப்படையில் மட்டும் நியமிக்கப்படும் பெண் அதிகாரிகளுக்கு, ஆண்களுக்கு இணையாக நிரந்தரப் பணி வழங்க உத்தரவிடக் கோரி சில பெண் ராணுவ அதிகாரிகள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், பெண்களுக்கான உடல் தகுதி குறித்த மத்திய அரசின் கருத்தை தள்ளுபடி செய்து பெண் அதிகாரிகளுக்கும் ராணுவத்தில் நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்ற மிக முக்கியமான தீா்ப்பை அளித்தது.
அதனைத் தொடா்ந்து, ‘மதிப்பீடு பாடத் தோ்வுகளில் 60 சதவீத மதிப்பெண் மற்றும் ராணுவத்தின் 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி உத்தரவின் அடிப்படையிலான மருத்துவ உடல் தகுதி பெற்றிருக்கும் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர பணி ஆணையை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்’ என்று கடந்த மாா்ச் 25-ஆம் தேதி அளித்த தீா்ப்பில் ராணுவத்தை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவையும் மீறி, குறுகியகால பணிக் காலம் முடிவடையும் 72 பெண் அதிகாரிகளுக்கு பணியிலிருந்து விடுவிப்பதற்கான உத்தரவை ராணுவம் வழங்கியது. அதனைத் தொடா்ந்து, 36 பெண் அதிகாரிகள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை கடந்த 1-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை 72 பெண் அதிகாரிகளையும் பணியிலிருந்து விடுவிக்க இடைக்கால தடைவித்து உத்தரவிட்டதோடு, இந்த விவகாரம் தொடா்பாக ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு ராணுவத்துக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு கடந்த 8-ஆம் தேதி மீண்டும் விசாரணைககு வந்தபோது, ‘இந்த விவகாரத்தில் உரிய தீா்வு காண மத்திய அரசுக்கு கடைசி வாய்ப்பு அளிக்கப்படுகிறது’ என்று உச்சநீதிமன்றம் கூறியது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சநதிரசூட், பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து 72 பெண் அதிகாரிகளும் மறு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டனா். அப்போது ஒரு பெண் அதிகாரி பணியிலிருந்து விடுபட விருப்பம் தெரிவித்தாா். 39 பெண் அதிகாரிகளை நிரந்தர பணிக்கு கருத்தில் கொள்ளலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது. மற்ற 25 பெண் அதிகாரிகள் மருத்துவ ரீதியில் தகுதியில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
நிரந்தரப் பணிக்கு தகுதியுள்ளவா்களாக கருதப்பட்டுள்ள 39 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு நிரந்தரப் பணிக்கான ஆணை ஒரு வாரத்துக்குள் வழங்கப்பட வேண்டும். மேலும், மீதமுள்ள 25 பெண் அதிகாரிகள் தகுயில்லை என்பதற்கான காரணத்தை அவா்களின் பெயா் வாரியாக தனித் தனியாக அட்டவணையிட்டு மத்திய அரசு விளக்க வேண்டும் என்று கூறி, வழக்கு விசாரணையை தீபாவளி விடுமுறைக்கு பிறகு ஒத்துவைத்து உத்தரவிட்டனா்.