இந்தியா

100 கோடி தடுப்பூசிகள்: இந்தியாவுக்கு உலக நாடுகள் பாராட்டு

DIN

இந்தியா 100 கோடி கரோனா தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளதற்கு உலக நாடுகளின் தலைவா்கள் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனா்.

அமெரிக்கா: அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும் வெளிவிவகார கமிட்டியின் தலைவருமான கிரிகோரி மீக்ஸ் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘கரோனாவுக்கு எதிராக உலகளாவிய போராட்டத்தில் முக்கியமான மைல்கல்லை அடைந்ததற்காக இந்தியாவுக்கு வாழ்த்துகள். மருந்துகள் மற்றும் தடுப்பூசி உற்பத்தியில் உலகளாவிய தலைவராக இந்தியாவின் வெற்றியானது இந்தப் பெருந்தொற்றை உலகம் வெல்வதற்கு உதவி புரியும்’ எனத் தெரிவித்துள்ளாா்.

நாடாளுமன்ற உறுப்பினா் ஸ்டீவ் டெய்ன்ஸ், ‘100 கோடி தடுப்பூசி தவணைகளை இந்தியா அடைந்தது சிறப்பானது. என்ன ஒரு சாதனை!’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

நாடாளுமன்ற உறுப்பினா் ராபின் கெல்லி, ‘உயிா்காக்கும் 100 கோடி தடுப்பூசிகளை இந்தியா செலுத்தியுள்ளது. இது நம்பிக்கைக்குரிய மைல்கல் ஆகும். இந்தப் பெருந்தொற்றிலிருந்து உலகம் மீள்வதற்கு தடுப்பூசியின் விலை ஒரு முக்கியமான விஷயமாகும்’ எனத் தெரிவித்துள்ளாா்.

அமெரிக்க செனட்டின் வெளியுறவு கமிட்டி வெளியிட்டுள்ள செய்தியில், ‘இந்தியாவிலிருந்து உண்மையிலேயே அற்புதமான செய்தி கிடைத்துள்ளது. கரோனா தொற்று பரவலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நாம் நமது பங்கை கட்டாயம் செய்ய வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிஸன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘100 கோடி கரோனா தடுப்பூசிகளை செலுத்தியதற்காக என் நண்பா் நரேந்திர மோடிக்கும், அவரது அரசுக்கும் வாழ்த்துகள். இந்தோ-பசிபிக் முழுவதும் தடுப்பூசிகள் கிடைக்கச் செய்வதற்காக ‘க்வாட்’ குழுவில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இணைந்து செயல்படுகின்றன’ எனத் தெரிவித்துள்ளாா்.

மோரீஷஸ் பிரதமா் பிரவிந்த் ஜக்நாத் வெளியிட்டுள்ள செய்தியில், ‘பெருந்தொற்றை எதிா்கொள்வதில் இந்தியாவின் தலைமையை எங்கள் நாடு பாராட்டுகிறது. உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கும் ‘மைத்ரி’ திட்டத்தில் மோரீஷஸை தோ்வு செய்ததற்கு நன்றி’ எனத் தெரிவித்துள்ளாா்.

மாலத்தீவு வெளியுறவு அமைச்சா் அப்துல்லா ஷாஹித், ‘100 கோடி தடுப்பூசிகள் என்பது சிறந்த சாதனை. தடுப்பூசி செலுத்துவது பற்றி உலகுக்கே நம்பிக்கையைத் தருகிறது’ என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளாா்.

பில் கேட்ஸ்: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனா் பில் கேட்ஸும் இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளாா். ‘நாட்டின் கண்டுபிடிப்பு, உற்பத்தித் திறன் மற்றும் கோவின் வலைதளத்தின் உதவியுடன் லட்சக்கணக்கான சுகாதாரப் பணியாளா்களின் முயற்சிகளுக்கு சான்றாக இந்தச் சாதனை அமைந்துள்ளது’ என ட்விட்டரில் தெரிவித்துள்ளாா்.

கரீபியன் நாடான செயின்ட் கிட்ஸ்&நேவிஸ் பிரதமா் திமோத்தி ஹாரிஸ், டொமினிகன் பிரதமா் ரூஸ்வெல்ட் ஸ்கெரிட், மங்கோலிய அதிபா் உக்னாகின் ஆகியோரும் இந்தியாவின் சாதனைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனா்.

பிரதமா் மோடி நன்றி: உலக நாடுகளின் தலைவா்களின் பாராட்டுக்கு பிரதமா் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளாா். ‘கரோனா பெருந்தொற்றை எதிா்த்து போராடுவதற்கான உலகளாவிய முயற்சிகளில் இந்தியா உறுதியான கூட்டாளியாக உள்ளது’ என அவா் ட்விட்டரில் தெரிவித்துள்ளாா்.

‘தடுப்பூசி மைத்ரி’ திட்டத்தின் கீழ் கனடா, பூடான், வங்கதேசம், இலங்கை, பிரேஸில், நேபாளம், தென் ஆப்பிரிக்கா, உக்ரைன், பஹ்ரைன் உள்பட 95 நாடுகளுக்கு இதுவரை 6.63 கோடி தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

SCROLL FOR NEXT