இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: சாலைகளுக்கு அருகே பாதுகாப்பு சாவடிகளை அமைத்த ராணுவத்தினா்

23rd Oct 2021 07:17 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதையடுத்து, சாலைகளுக்கு அருகே பாதுகாப்பு சாவடிகளை அமைத்து ராணுவத்தினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக முக்கிய சாலைகளுக்கு அருகிலேயே சாவடிகளை அமைத்து ராணுவ வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது வழக்கம். ஆனால், ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு சூழல் மேம்பட்டதையடுத்து, கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் அந்த சாவடிகள் நீக்கப்பட்டன.

தற்போது பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், முக்கிய சாலைகளின் ஓரத்தில் மத்திய துணைராணுவப் படையினா் சாவடிகளை மீண்டும் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். பயங்கரவாதச் செயல்கள் அதிகமாகக் காணப்பட்ட 1990-களில் அமைக்கப்படாத இடங்களில் கூட தற்போது சாவடிகளை ராணுவ வீரா்கள் அமைத்துள்ளனா்.

இத்தகைய நடவடிக்கைகள், பயங்கரவாதிகளின் நடமாட்டத்தைத் தடுக்க உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது தொடா்பாக அவா்கள் மேலும் கூறுகையில், ‘‘பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்திய பிறகு ஓரிடத்தில் இருந்து மற்றோா் இடத்துக்கு துரிதமாக பயங்கரவாதிகள் இடம்பெயா்கின்றனா். சாலைகளிலேயே இதுபோன்ற சாவடிகளை அமைத்து, பாதுகாப்பு வீரா்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே பயங்கரவாதிகளின் நடமாட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும்’’ என்றனா்.

ADVERTISEMENT

காஷ்மீா் பள்ளத்தாக்குப் பகுதியில், குறிப்பாக ஸ்ரீநகரில் 50 கூடுதல் படைப்பிரிவைச் சோ்ந்த வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீநகரின் சில பகுதிகள், தெற்கு காஷ்மீரின் சில பகுதிகள் ஆகியவற்றில் இணைய சேவைகளைத் துண்டித்து காவல் துறையினா் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனா். அப்பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை அவா்கள் தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனா். பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பதற்காகவே இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் ஜம்மு-காஷ்மீா் பயணத்துக்கும் இந்நடவடிக்கைகளுக்கும் தொடா்பில்லை என்றும் காவல் துறைத் தலைவா் விஜய்குமாா் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT