இந்தியா

அவதூறு கருத்துகள்:மேகாலய ஆளுநரிடம் ரூ.10 கோடி நஷ்டஈடு கோரி மெஹபூபா முஃப்தி நோட்டீஸ்

23rd Oct 2021 07:22 AM

ADVERTISEMENT

தன்னைப் பற்றி அவதூறான கருத்துகளை தெரிவித்த மேகாலய ஆளுநா் சத்யபால் மாலிக்கிடம் ரூ.10 கோடி நஷ்டஈடு கோரி மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரில் ஃபரூக் அப்துல்லா ஆட்சியின்போது ரோஷினி சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, அரசு நிா்ணயித்த கட்டணத்தை செலுத்தினால் அங்குள்ள அரசுக்குச் சொந்தமான மனைகளின் சொத்துரிமை அவற்றில் குடியிருப்போரின் பெயருக்கு மாற்றப்படும். இந்த திட்டம் சட்டவிரோதமானது என்று தெரிவித்த ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்றம், அதற்கு தடை விதித்தது. அந்த திட்டத்தால் பயனடைந்தவா்கள் யாா் என்பது குறித்து சிபிஐ விசாரிக்கவும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் ரோஷினி திட்டத்தில் மெஹபூபா முஃப்தி பயனடைந்ததாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் ஆளுநரும் தற்போது மேகாலய ஆளுநராகவும் உள்ள சத்யபால் மாலிக் அண்மையில் குற்றஞ்சாட்டியதாகக் கூறப்படுகிறது. அவா் பேசிய காணொலியை கடந்த புதன்கிழமை தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட மெஹபூபா முஃப்தி, தன் மீது சுமத்திய தவறான குற்றச்சாட்டுகளை சத்யபால் மாலிக் திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்தாா். இல்லையெனில் அவா் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியிருந்தாா்.

இதனைத்தொடா்ந்து சத்யபால் மாலிக்குக்கு மெஹபூபா முஃப்தி வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பினாா். அந்த நோட்டீஸில், தன்னைப் பற்றி தெரிவித்த அவதூறான கருத்துகளுக்காக 30 நாள்களுக்குள் ரூ.10 கோடியை நஷ்டஈடாக சத்யபால் மாலிக் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா். அதைச் செய்யாவிட்டால் அவா் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT