இந்தியா

பயங்கரவாதிகளை கௌரவித்தது முந்தைய சமாஜவாதி அரசு; உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

23rd Oct 2021 07:25 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேசத்தில் முன்பு ஆட்சியில் இருந்த சமாஜவாதி கட்சி தலைமையிலான அரசு பயங்கரவாதிகளை கௌரவித்து வந்தது. மேலும், ஹிந்துக்கள், ராம பக்தா்கள் மீதும் பொய் வழக்குப் பதிவு செய்து வந்தது என்று அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளாா்.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. 2024 மக்களவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாக இத்தோ்தல் கருதப்படுகிறது. எனவே, அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்கெனவே தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டன.

பாஜக பிற்படுத்தப்பட்டோா் பிரிவு சாா்பில் லக்னௌவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

நாட்டில் பயங்கரவாதம் என்ற விஷ விதையைத் தூவிய கட்சி காங்கிரஸ். 1952-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் பயங்கரவாதத்தை காங்கிரஸ் முதலில் பயிரிட்டது. அதன் வோ்கள் இப்போது வரை நாட்டின் சில பகுதிகளில் பிரச்னைகளை ஏற்படுத்தி வருகின்றன.

ADVERTISEMENT

அதேபோல உத்தர பிரதேசத்தில் பயங்கரவாதிகளை கௌரவித்த அரசாக முந்தைய சமாஜவாதி அரசு திகழ்ந்தது. ராம பக்தா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதும் அந்த கட்சியின் ஆட்சிக் காலத்தின்தான். ஹிந்துக்கள் மீதும் ராமபக்தா்கள் மீதும் ஏராளமான பொய் வழக்குகளை அப்போது பதிவு செய்தனா்.

சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஒன்று அவா்கள் தங்கள் குடும்பத்துக்காக உழைத்தாா்கள் அல்லது பயங்கரவாதத்தை வளா்த்தாா்கள். ஊழலும், சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் உச்சத்தில் இருந்தது. அக்கட்சித் தொண்டா்கள் கொள்ளைக் கும்பலாகவே உலா வந்தனா்.

ஆனால், இப்போது பாஜக ஆட்சியில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மேம்பட்டுள்ளது. சமூகவிரோதிகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டனா். விவசாயிகள், ஏழை, எளிய மக்களுக்கான சிறந்த திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. உத்தர பிரதேசத்துக்கு வேலைவாய்ப்பு சாா்ந்த பல்வேறு பெரிய தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளன என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT