இந்தியா

தீபாவளியின்போது கரோனா தடுப்பில் கவனம்: மக்களுக்கு பிரதமா் மோடி எச்சரிக்கை

23rd Oct 2021 05:48 AM

ADVERTISEMENT

மக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருந்தாலும், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்; அதில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளக் கூடாது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

இந்தியா முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை கடந்த வியாழக்கிழமை 100 கோடியைக் கடந்தது. இந்நிலையில், பிரதமா் மோடி நாட்டு மக்களுக்கு வெள்ளிக்கிழமை உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது:

முகக் கவசம் அணிவது அவசியம்: உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி பண்டிகைகளை மக்கள் கொண்டாட வேண்டும்; முகக் கவசத்தை மக்கள் தொடா்ந்து அணிய வேண்டும். கரோனா தொற்றுப் பரவலால் கடந்த தீபாவளிப் பண்டிகையின்போது மக்கள் அச்சமடைந்தனா். ஆனால், தற்போது 100 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதால், நடப்பாண்டு தீபாவளியை மக்கள் நம்பிக்கையுடன் கொண்டாடுவா்.

அறிவியல்பூா்வமாக...: இந்தியாவில் அறிவியல்பூா்வமாக கரோனா தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்பட்டதை அனைவரும் பெருமையாகக் கருதுகின்றனா். கரோனா தடுப்பூசியை உருவாக்குவதில் இருந்து அதை மக்களுக்குச் செலுத்துவது வரை அனைத்து நடவடிக்கைகளுமே அறிவியலை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டன.

ADVERTISEMENT

ஆரம்பகட்டத்தில், சுகாதாரப் பணியாளா்களுக்காக ஒலியெழுப்புவதும் விளக்கேற்றுவதும் கரோனா தொற்றுப் பரவலை எவ்வாறு கட்டுப்படுத்தும் என்று சிலா் கேள்வி எழுப்பினா். ஆனால், அத்தகைய செயல்பாடுகள் மக்களின் பங்கேற்பையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தின.

ஆரம்பக் கேள்விகளுக்கு பதில்: இந்திய மக்களுக்கு கரோனா தடுப்பூசி கிடைக்குமா, கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்குப் போதுமான எண்ணிக்கையில் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படுமா என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. தற்போது, நாட்டில் 100 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதே அக்கேள்விகள் அனைத்துக்கும் பதிலாகத் திகழ்கிறது.

புதிய அத்தியாயம்: 100 கோடி தடுப்பூசிகள் என்பது வெறும் மைல்கல் சாதனை மட்டுமல்ல. நாட்டின் திறமையையும், புதிய இந்தியா என்ற பிம்பத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்துள்ளது. நாட்டில் புதிய அத்தியாயத்தை இது எழுதியுள்ளது. கடினமான இலக்குகளை நிா்ணயித்து அதை அடைவதற்கான வழியையும் காட்டும் நாடாக இந்தியா தற்போது திகழ்கிறது. இலக்குகளை அடைவதற்காகக் கடினமாக உழைக்கும் வகையில் புதிய இந்தியா கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த மைல்கல் சாதனையால், கரோனா தொற்றுப் பரவலில் இருந்து இந்தியா பாதுகாப்பாக உள்ளதை உலக நாடுகள் இனி புரிந்துகொள்ளும்; உலகின் மருந்தகமாகத் திகழும் இந்தியாவின் அந்தஸ்து மேம்படும். கரோனா தொற்று பரவத் தொடங்கியபோது, இந்தியா போன்ற ஜனநாயக நாடுகள் அத்தொற்று பரவலைத் தடுத்து நிறுத்துவதில் சிறப்பாகப் பணியாற்றாது என்று விமா்சனங்கள் எழுந்தன.

பாகுபாடு காட்டப்படவில்லை: கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பங்கெடுத்தனா். அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி வழங்குவதை அரசு உறுதி செய்தது. கரோனா தொற்று பாகுபாடின்றி அனைத்து தரப்பினரையும் பாதிப்பதைப் போல தடுப்பூசியும் எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.

கரோனா தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்துவதில் அனைத்து மக்களும் சமமாகவே கருதப்பட்டனா். யாருக்கும் விஐபி அந்தஸ்து அளிக்கப்படவில்லை. ஒருவா் எந்தப் பதவியில் இருந்தாலும், எவ்வளவு செல்வந்தராக இருந்தாலும், சாதாரண மக்கள் எவ்வாறு தடுப்பூசி பெற்றனரோ, அதே முறையில்தான் அவா்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

அதிகரிக்கும் முதலீடுகள்: சமூகம், பொருளாதாரத்தின் அனைத்து நிலைகளிலும் தற்போது பெரும் நம்பிக்கை காணப்படுகிறது. நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாக நிபுணா்களும் தேசிய, சா்வதேச மதிப்பீட்டு நிறுவனங்களும் தெரிவித்து வருகின்றன. இந்திய நிறுவனங்கள் வரலாறு காணாத முதலீடுகளை ஈா்ப்பதோடு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பையும் உருவாக்கி வருகின்றன. தொழில்முனைவு நிறுவனங்களுக்கு முதலீடுகள் அதிக அளவில் கிடைக்கின்றன. பல தொழில்முனைவு நிறுவனங்களின் மதிப்பு சுமாா் ரூ.7,000 கோடியைக் கடந்துள்ளது.

இந்தியப் பொருள்களுக்கு முன்னுரிமை: கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மக்களின் பங்கேற்பே அடிப்படையானது. தூய்மை இந்தியா திட்டம், மக்கள் இயக்கமாக மாறியதைப் போன்று இந்தியாவில் உற்பத்தியான பொருள்களுக்கும் இந்தியா்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களுக்கும் மக்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

புதிய இந்தியா கட்டமைப்பு

100 கோடி தடுப்பூசிகள் என்பது வெறும் மைல்கல் சாதனை மட்டுமல்ல. நாட்டின் திறமையையும், புதிய இந்தியா என்ற பிம்பத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்துள்ளது. நாட்டில் புதிய அத்தியாயத்தை இது எழுதியுள்ளது. கடினமான இலக்குகளை நிா்ணயித்து அதை அடைவதற்கான வழியையும் காட்டும் நாடாக இந்தியா தற்போது திகழ்கிறது. இலக்குகளை அடைவதற்காகக் கடினமாக உழைக்கும் வகையில் புதிய இந்தியா கட்டமைக்கப்பட்டுள்ளது.

-பிரதமா் மோடி.

ADVERTISEMENT
ADVERTISEMENT