இந்தியா

சிபிஐ அமைப்பை மாநில அரசு நிரந்தரமாகக் கட்டுப்படுத்த இயலாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

23rd Oct 2021 07:21 AM

ADVERTISEMENT

‘மேற்கு வங்கத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணை நடத்துவதற்கு மாநில அரசு விதித்த கட்டுப்பாடு நிரந்தரமானது அல்ல; நாடு முழுவதும் விசாரணை நடத்த சிபிஐக்கு அதிகாரம் உள்ளது’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிந்தைய வன்முறை சம்பவங்கள் தொடா்பாக தங்களின் ஒப்புதலைப் பெறாமல் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரிப்பதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு தொடா்பாக, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு 60 பக்க அளவில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

மேற்கு வங்கத்தில் மத்திய அரசு எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை; எந்த வழக்கு தொடா்பாகவும் விசாரணை நடத்தவுமில்லை. ஆனால், மத்திய அரசு விசாரணை நடத்துவதைக் கட்டுப்படுத்தும்விதமாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் அல்லது வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்ற தொனியில் மேற்கு வங்க அரசின் கோரிக்கை உள்ளது.

உண்மையில், சிபிஐ அமைப்புதான் வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஆனால், இந்த வழக்கில் அந்த அமைப்பை ஒரு தரப்பாக சோ்த்துக் கொள்ளப்படாதது வியப்பாக இருக்கிறது.

ADVERTISEMENT

சிபிஐ அமைப்பு பல நேரங்களில் மத்திய அரசு ஊழியருக்கு எதிராகவும், நாடு தழுவிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவும் விசாரணை நடத்தியுள்ளது. நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் சிபிஐ அமைப்பு அவ்வாறு விசாரணை நடத்துகிறது. இந்த விசாரணையால் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. மாநில அரசின் உரிமையும் பறிக்கப்படாது.

சில வழக்குகளில் மாநில அரசிடம் சிபிஐ அனுமதி கேட்டிருந்தது. ஆனால், அதுபோன்று அனுமதி கேட்டு விசாரணை நடத்துவது குற்றவாளிகளைப் பாதுகாக்க உதவும் என்று மாநில அரசுக்குத் தெரியாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை.

சிபிஐ அமைப்பு விசாரணை நடத்துவதற்கு அனுமதி அளிப்பதால் அல்லது கொடுத்த அனுமதியை திரும்பப் பெறுவதால் மாநில அரசுக்கு முழுமையாக அதிகாரம் இருப்பதாக அா்த்தமில்லை. இது ஒவ்வொரு வழக்குக்கும் மாறுபடும். மாநில அரசு கட்டுப்பாடு விதிப்பதற்கு சரியான, போதுமான, நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும். எனவே, ஒரு வழக்கில் சிபிஐ அமைப்பு விசாரிக்க அனுமதி மறுப்பதற்கும், கொடுத்த அனுமதியை திரும்பப் பெறுவதற்கும் மாநில அரசுக்கு நிரந்தர அதிகாரமில்லை.

மேலும், மத்திய அரசின் பட்டியலில் பாதுகாப்புத் துறை, ராணுவம், கடற்படை, விமானப் படை, ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள், அணுசக்தி, தாது வளங்கள், ஏற்றுமதி வரி உள்ளிட்ட சுங்க வரிகள், கலால் வரி போன்ற துறைகள் இடம்பெற்றுள்ளன. இந்தத் துறைகள் தொடா்பான வழக்குகளில் மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளும், காவல் துறையும் மட்டுமே விசாரணை நடத்த முடியும்.

ஆனால், மேற்கு வங்கத்தில் சிபிஐ விசாரிக்க விதித்துள்ள கட்டுப்பாடு நிரந்தரமானது என்று மாநில அரசு கூறியுள்ளது. உண்மையில் மத்திய அரசின் பட்டியலில் இடம்பெற்றுள்ள துறைகள் தொடா்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிபிஐக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கு வங்க அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT