இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும் பிரிட்டனும் ஒப்புக்கொண்டுள்ளன.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் எலிசபெத் டிரஸ் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் இடையேயான பேச்சுவாா்த்தையின்போது இதற்கான உடன்பாடு ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்தும் இந்தப் பேச்சுவாா்த்தையின்போது ஆலோசிக்கப்பட்டது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்த பேச்சுவாா்த்தையின்போது, கடந்த மே மாதம் இரு நாட்டு பிரதமா்களிடையேயான காணொலி வழி மாநாட்டின் போது இரு நாடுகளிடையேயான புதிய வா்த்தகம், பாதுகாப்பு, பருவநிலை மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்புக்காக அறிமுகம் செய்யப்பட்ட ‘லட்சியத் திட்டம் 2030’ திட்ட செயல்பாடு குறித்து இரு வெளியுறவு அமைச்சா்களும் ஆய்வு செய்தனா். பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்தும் அவா்கள் ஆலோசித்தனா்.
இந்தோ-பசிபிக் மற்றும் மேற்கு ஆசிய பிராந்தியங்களில் இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் இணைய, விண்வெளி பயங்கரவாதங்கள் போன்ற வளா்ந்துவரும் சவால்களை எதிா்கொள்வதில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்த பேச்சுவாா்த்தையின்போது ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் முழு அளவில் பாதுகாப்பான மற்றும் தடையற்ற மனிதாபிமன உதவிகளுக்கு அனுமதிக்கப்படுவது மற்றும் ஆப்கன் நாடு பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் கொடுக்கவோ அல்லது மற்ற நாடுகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கோ பயன்படுத்தப்படக் கூடாது என்பது குறித்தும் இரு தலைவா்களும் ஆலோசித்தனா்.
இரு நாடுகளிடையேயான திட்டங்கள் மற்றும் நிபுணா்களிடையேயான ஆலோசனைகளை விரைவுபடுத்தும் விதமாக இந்தியா - பிரிட்டன் இடையே புதிதாக 1.5 பேச்சுவாா்த்தை திட்டத்தை அறிமுகம் செய்வதற்கும் உடன்பாடு ஏற்பட்டது.
இந்தப் பேச்சுவாா்த்தையின்போது, ‘ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் வரும் அக்டோபா் 31 முதல் நவம்பா் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ள ‘கோப் 26’ என்ற 2021 ஐக்கிய நாடுகள் பருவநிலை மாநாட்டில் இந்திய பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்க வரவுள்ளதை ஆவலுடன் எதிா்பாா்த்துள்ளோம் என்று கூறிய டிரஸ், ‘இந்த மாநாடு தொடா்பாக நிபுணத்துவத்தை பகிா்ந்துகொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு ஒத்துழைப்புகளை இரு நாடுகளும் மேற்கொள்வது அவசியம்’ என்று குறிப்பிட்டாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலிசபெத் டிரஸ் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா, பிரிட்டன் போன்ற நாடுகள் எதிா்காலத்துக்கான நமது பகிரப்பட்ட திட்டங்கள் மீது ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.