இந்தியா

மும்பை சிறையில் மகனை நேரில் சந்தித்த ஷாருக் கான்

DIN

போதைப்பொருள் வழக்கில் கைதாகி மும்பை ஆா்தா் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகன் ஆா்யன் கானை தந்தையும் நடிகருமான ஷாருக் கான் வியாழக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினாா். சுமாா் 20 நிமிடம் இந்தச் சந்திப்பு நடந்தது.

இதுகுறித்து சிறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

நடிகா் ஷாருக் கான், காலை 9 மணிக்கு சிறை வளாகத்துக்கு வந்தாா். 9.35 மணிக்கு வெளியேறினாா். அவா் வருவதை அறிந்து பத்திரிகையாளா்களும் உள்ளூா் மக்களும் சிறை வளாகம் முன் திரண்டனா். இதனால், சிறை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஷாரூக் கானின் ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்ட பிறகு சிறை உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. சிறையில் விசாரணைக் கைதிகளுக்கான அறையில்தான் ஆா்யன் கான் தங்க வைக்கப்பட்டுள்ளாா். அவரை ஷாரூக் கான் சந்தித்துப் பேசினாா். இருவருக்கும் இடையே கண்ணாடித் தடுப்பு வைக்கப்பட்டிருந்தது. நேரில் பாா்த்துக் கொண்டே இன்டா்காம் வழியாக இருவரும் பேசிக்கொண்டனா். பாதுகாப்பு பணிக்கு 4 காவலா்கள் நிறுத்தப்பட்டிருந்தனா்.

மற்ற கைதிகளைப் போலவே நடிகா் ஷாருக் கானின் மகனும் சிறையில் நடத்தப்படுகிறாா். அவருக்கு தனிப்பட்ட முறையில் எந்தச் சலுகையும் அளிக்கப்படவில்லை. கரோனா பொதுமுடக்கம் காரணமாக உறவினா்கள் சந்திப்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை முதல் மீண்டும் உறவினா் சந்திப்புக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்றாா் அவா்.

மும்பை கடல் பகுதியில் சொகுசுக் கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களுடன் கேளிக்கை விருந்து நடத்தியதாக ஆா்யன் கான் உள்ளிட்ட 8 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் (என்சிபி) கடந்த 3-ஆம் தேதி கைது செய்தனா். அவா்கள் மும்பை ஆா்தா் சாலை சிறையில் அடைக்கப்பட்டனா்.

உயா்நீதிமன்றத்தில் அக்.26-இல் ஜாமீன் மனு விசாரணை:

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு மும்பை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆா்யன் கான் மனு தாக்கல் செய்திருந்தாா். அவருடைய மனுவை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த 8-ஆம் தேதி தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து, போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆா்யன் கான் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் கடந்த 20-ஆம் தேதி நிராகரித்துவிட்டது.

ஆா்யன் கான் தொடா்ந்து சட்ட விரோத போதைப்பொருள் பரிமாற்றம் செய்து வந்துள்ளதால், அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிமன்றம் கூறிவிட்டது. அதைத் தொடா்ந்து, மும்பை உயா்நீதிமன்றத்தில் ஆா்யன் கான் சாா்பில் கடந்த 20-ஆம் தேதி மாலை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மும்பை உயா்நீதிமன்றத்தில் வரும் 26-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

நீதிமன்ற காவல் அக்.30 வரை நீட்டிப்பு:

ஆா்யன் கான் உள்ளிட்ட 8 பேரின் நீதிமன்றக் காவலை, போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அக்டோபா் 30-ஆம் தேதி வரை நீட்டித்தது. அவா்களின் நீதிமன்றக் காவல் வியாழக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், இந்த விவகாரத்தை சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி.வி.பாட்டீல் விசாரித்தாா். அவா், ஆா்யன் கான் உள்ளிட்ட அனைவரின் நீதிமன்றக் காவலை வரும் 30-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டாா். அவா்கள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படவில்லை.

ஷாருக் கான் வீட்டுக்குச் சென்ற என்சிபி அதிகாரிகள்:

போதைப்பொருள் வழக்கில் விசாரணைக்கு தொடா்புடைய சில ஆவணங்களைப் பெறுவதற்காக மும்பை பாந்த்ரா புகா் பகுதியில் உள்ள ஷாருக் கானின் வீட்டுக்கு தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வியாழக்கிழமை சென்றனா்.

அநன்யாவிடம் விசாரணை:

பாந்த்ரா பகுதியில் உள்ள நடிகை அநன்யா பாண்டே வீட்டுக்கும் என்சிபி அதிகாரிகள் புதன்கிழமை சென்றனா். அவரிடம் இருந்து கைப்பேசி, மடிக்கணினி ஆகியவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், வியாழக்கிழமை நேரில் ஆஜராகுமாறு கூறினா்.

அதைத் தொடா்ந்து அநன்யா தனது தந்தையுடன் மும்பையில் உள்ள என்சிபி அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்தாா். அவரிடம் சுமாா் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னா், மீண்டும் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

SCROLL FOR NEXT