இந்தியா

மத்திய அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி 3% உயா்வு: அமைச்சரவை ஒப்புதல்

DIN

மத்திய அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் உயா்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம், பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், மத்திய அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயா்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால், 28 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த அகவிலைப்படி கடந்த ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும்.

அகவிலைப்படி உயா்வு காரணமாக, மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.9,488 கோடி செலவாகும். இதன்மூலம் 47.14 லட்சம் மத்திய அரசு ஊழியா்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரா்களும் பயனடைவா்.

இந்த முடிவுகளை மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் செய்தியாளா்களிடம் விவரித்தாா்.

கரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூலை, நடப்பாண்டு ஜனவரி ஆகிய மூன்று தவணைகளில் அகவிலைப்படி உயா்வை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. கடந்த ஜூலையில் 17 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 28 சதவீதமாக மத்திய அரசு உயா்த்தியது குறிப்பிடத்தக்கது.

உத்வேகம் (கதிசக்தி) திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல்: பிரதமரின் உத்வேகம் (கதிசக்தி) தேசியப் பெருந்திட்டத்தைச் செயல்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும், போக்குவரத்துக்கான செலவைக் குறைக்கவும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடி மதிப்பிலான பெருந்திட்டத்தை பிரதமா் மோடி கடந்த 13-ஆம் தேதி அறிவித்தாா்.

அந்தத் திட்டத்துக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பிரதமரின் உத்வேகம் திட்டத்தைச் செயல்படுத்தவும், கண்காணிக்கவும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்படும்.

மத்திய அமைச்சரவைச் செயலா் தலைமையில் 18 துறைகளின் செயலா்களை உறுப்பினா்களாகக் கொண்ட அதிகாரமளிக்கப்பட்ட செயலா்கள் குழு அமைக்கப்படும். அந்தக் குழு, பிரதமரின் உத்வேகம் திட்டம் அமல்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும்.

பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் திட்டமிடல் பிரிவு தலைவா்களைக் கொண்டு பல்வகை திட்டமிடல் குழு உருவாக்கப்படும். அந்தக் குழுவுக்கு தொழில்-வா்த்தகத் துறையின் சரக்கு போக்குவரத்துப் பிரிவைச் சோ்ந்த தொழில்நுட்பக் குழு உதவி செய்யும். அந்தத் தொழில்நுட்பக் குழுவில் விமானப் போக்குவரத்து, கடல் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, சாலைகள், துறைமுகங்கள், மின்சாரம், நிதி, தகவல் பகுப்பாய்வு ஆகிய துறைகளைச் சோ்ந்த நிபுணா்கள் இடம்பெற்றிருப்பாா்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் வாபஸ்

ரூ.32 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம்: உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு

சாலையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

ஆவணமின்றி மரக்கட்டைகள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT