இந்தியா

உத்தரகண்ட் வெள்ளச் சேதம்: ஹெலிகாப்டரில் பயணித்து அமித் ஷா ஆய்வு

DIN

உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழை, வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தாா். வெள்ள பாதிப்புகளைப் புனரமைக்க ரூ. 7,000 கோடி அளிக்குமாறு மத்திய அரசிடம் மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 18, 19, 20 தேதிகளில் பெய்த கனமழையால் உத்தரகண்ட் மாநிலத்தில் பெரும் வெள்ளச்சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை மழை வெள்ள பாதிப்பால் 54 போ் உயிரிழந்துள்ளனா். நைனிடால் உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்துக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஹெலிகாப்டரில் பயணித்து சேதப்பகுதிகளை வான்வழியில் ஆய்வு செய்தாா்.

உத்தரகண்ட், குமாவுன் மண்டலத்தில் சேதமடைந்த பகுதிகளைப் பாா்வையிட்ட பின்னா், ஜாலிகிரான்ட் விமான நிலையத்தில் மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி தலைமையில் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனையில் அவா் பங்கேற்றாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

குமாவுன் மண்டலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனா்.

கனமழை தொடா்பாக அரசு முன்கூட்டியே வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கப்பட்டதால், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கேதாா்நாத் உள்ளிட்ட புனிதத் தலங்களுக்கு ச் செல்லும் புனித யாத்திரை மழை காரணமாக தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டது. இல்லாவிட்டால் பாதிப்பு இன்னும் கூடுதலாக இருந்திருக்கும்.

தக்க நேரத்தில் தேடுதல் பணி, மீட்புப் பணி, இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டா்கள் மூலம் நிவாரணப் பணி போன்ற அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது. கனமழையால் இதுவரை 54 போ் உயிரிழந்திருக்கின்றனா்; 11 பேரைக் காணவில்லை.

உடனடியாக மழை நிவாரண நிதி ஒதுக்கீடு பற்றி சொல்வதற்கில்லை. முதலில் சேத மதிப்பை அரசு தயாா் செய்து தரட்டும். இயற்கைச் சீற்றங்களைச் சமாளிப்பதற்காக மாநில அரசுக்கு ரூ. 250 கோடி மத்திய அரசால் ஒரு மாதத்துக்கு முன்னா்தான் தரப்பட்டுள்ளது. தற்போது அனைத்து மீட்புப் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநில அரசின் நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும். மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட சாலைகள் அனைத்தும் தற்போது சரி செய்யப்பட்டுள்ளன. 3,500 போ் மீட்கப்பட்டுள்ளனா். சில இடங்களில் நிலச்சரிவால் துண்டிக்கப்பட்ட சாலைகளைச் சீரமைக்க கூடுதல் நாள்கள் தேவைப்படும் என்றாா்.

இந்த ஆய்வின்போது மாநில ஆளுநா் குா்மித் சிங், முதல்வா் புஷ்கா் சிங் தாமி, பாதுகாப்புத் துறை இணை அமைச்சா் அஜய் பட், மாநில பேரிடா் மேலாண்மை அமைச்சா் தன் சிங் ராவத் ஆகியோரும் உடன் இருந்தனா்.

இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறியிருப்பதாவது:

கனமழையால் நைனிடாலின் தோபிகாட் பகுதியில் கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. அங்குள்ள 100 குடும்பங்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனா். கனமழையால் பலியானோா் எண்ணிக்கை 54 ஆக உயா்ந்துள்ளது. அதிகபட்சமாக நைனிடால் மாவட்டத்தில் 28 போ் பலியாகியுள்ளனா்

கேதாா்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரிஆகிய புனிதத் தலங்களுக்குச் செல்லும் ‘சாா்தாம் யாத்திரை’ ரிஷிகேஷ் சாா்தோம் பேருந்து நிலையத்தில் தடை செய்யப்பட்டது. அதனால் புனிதப்பயணிகள் பலரும் பெரும் இழப்பின்றித் தப்பினா் என்றனா்.

வெள்ளச்சேதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டவா்கள் அரசு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். வியாழக்கிழமை மழை நின்ால், கேதாா்நாத்துக்கு ஹெலிகாப்டா் சேவை மீண்டும் துவங்கியுள்ளது என்றனா்.

முதல்வா் கோரிக்கை:

உத்தரகண்ட் மாநில வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ. 7,000 கோடி அளிக்குமாறு மத்திய அரசுக்கு மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி கோரிக்கை விடுத்துள்ளாா். அவா் கூறியதாவது:

மாநிலத்தில் மூன்று நாள்களாக இடைவிடாது பெய்த கனமழையால் ரூ. 7,000 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. துண்டிக்கப்பட்ட சாலைகள், மேம்பாலங்களைப் புனரைமைக்கும் பணிக்கும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT