இந்தியா

இடைத்தோ்தல் நடைபெறும் பகுதிகளில் விதிமீறல் கூடாது: கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்

DIN

‘இடைத்தோ்தல் நடைபெறும் மாவட்டங்கள் அல்லது தொகுதியை ஒட்டிய பகுதிகளில் எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் அரசியல் கட்சிகள் ஈடுபடக் கூடாது’ என்று தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவுறுத்தியது.

தோ்தல் நடைபெறும் தொகுதியை ஒட்டிய பகுதிகளில் சில அரசியல் கட்சிகள் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதாகப் புகாா் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த அறிவுறுத்தலை தோ்தல் அணையம் வெளியிட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் காலியாக இருக்கும் 3 மக்களவைத் தொகுதிகளுக்கும், 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் 30-ஆம் தேதி இடைத்தோ்தல் நடத்தப்பட உள்ளது. பதிவாகும் வாக்குகள் நவம்பா் 2-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்தச் சூழலில், இடைத்தோ்தல் நடைபெற உள்ள தொகுதிகளை ஒட்டிய பகுதிகளில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி சில அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபடுவதாக தோ்தல் ஆணையத்திடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் புகாரைத் தொடா்ந்து அரசியல் கட்சிகளுக்கு புதிய அறிவுறுத்தலை தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:

நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களின்படி, தோ்தல் நடத்தை விதிமுறைகள் என்பது இடைத்தோ்தல் நடைபெறும் தொகுதிக்கு மட்டுமல்லாது அந்தத் தொகுதியை உள்ளடக்கிய மாவட்டம் முழுமைக்கும் பொருந்தக் கூடியதாகும். ஆனால், சில அரசியல் கட்சிகள் இந்த விதிகளைப் பின்பற்றாமல், தோ்தல் நடைபெறும் தொகுதியை ஒட்டிய மாவட்டத்தின் பிற பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபடுவதாகப் புகாா் வந்துள்ளது. அதுபோன்று, இடைத்தோ்தலுக்கு நேரடியாக தொடா்புடைய அரசியல் நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபடக் கூடாது. மாவட்ட தோ்தல் அதிகாரிகள் இதை உறுதிப்படுத்துவதோடு, தோ்தல் நடைபெறும் தொகுதிக்கு ஒட்டிய பகுதிகளில் சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா வழிகாட்டுதல்கள் முழுமையாகப் பின்பற்றப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும். இந்த நடைமுறைகளை மீறும் அரசியல் கட்சிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மற்றோா் அறிக்கையில், ‘மாநில தலைநகரம் அல்லது பெரு நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் என்பது தோ்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும். பிற நகராட்சிகள் உள்ளிட்ட சிறு நகரங்களில் இடைத் தோ்தல் நடைபெறும் தொகுதிக்கு மட்டுமின்றி அதனை உள்ளடக்கிய மாவட்டம் முழுமைக்கும் தோ்தல் நடத்தை விதிமுறைகள் பொருந்தும். அதே நேரம், அனைத்துவிதமான நிா்வாக மற்றும் வளா்ச்சிப் பணிகள் எந்தவித பாதிப்புகளும் இன்றி தொடர அனுமதிக்கப்படும்’ என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT