இந்தியா

சட்டப் போரில் வெற்றி; 39 பெண் ராணுவ அலுவலர்களுக்கு நிரந்தர ஆணையம்

22nd Oct 2021 02:04 PM

ADVERTISEMENT

உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போரில் வெற்றுபெற்றதை தொடர்ந்து, 39 பெண் ராணுவ வீரர்களுக்கு நிரந்தர ஆணையம் கிடைத்துள்ளது. இந்த பெண்களுக்கான புதிய சேவை நிலையை ஏழு பணி நாள்களுக்குள் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

நிரந்தர ஆணைய சேவை என்பது ஓய்வு பெறும் வரை ராணுவத்தில் பணியாற்ற வழிவகை செய்கிறது. குறுகிய கால சேவை ஆணையம் என்பது ராணுவத்தில் 10 ஆண்டுகள் வரை பணியாற்ற வழிவகை செய்கிறது. 10 ஆண்டுகளுக்கு பின்னர், ஒன்று அவர்கள் ஓய்வு பெறலாம் அல்லது நிரந்தர ஆணையத்தை கோரலாம். 

நிரந்தர ஆணையத்தை கேட்டு கோரிக்கை விடுப்பவர்களுக்கு அது மறுக்கப்படும் பட்சத்தில், சேவையை நான்கு ஆண்டுகள் வரை நீட்டிக்க அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குறுகிய கால சேவை ஆணையத்தின் 71 பெண் ராணுவ அலுவலர்களுக்கு நிரந்தர ஆணையம் மறுக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

அப்போது, மொத்தமுள்ள 71 பேரில் 39 பேர் நிரந்தர ஆணையத்தில் சேர தகுதி பெற்றவர்களாக உள்ளனர் என மத்திய அரசு தெரிவித்தது. மீதமுள்ளவர்களில், ஏழு பேர் மருத்துவ ரீதியாக தகுதியற்றவர்கள் என்றும் 25 பேர் மீது ஒழுங்குமுறை பிரச்னை உள்ளது என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது. 

ADVERTISEMENT

இதையடுத்து, அந்த 25 பேருக்கு நிரந்தர ஆணையம் மறுக்கப்படுவதற்கான காரணத்தை முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், அக்டோபர் 1ஆம் தேதி, எந்த அலுவலர்களையும் சேவையிலிருந்து விடுவிக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதையும் படிக்கமருத்துவ வல்லுநா்கள் கூறும்வரை முகக்கவசம் தொடா்ந்து அணிய வேண்டும்: மத்திய அமைச்சா் வேண்டுகோள்

உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக வரவுள்ள பி. வி. நாகாரத்னா, நீதிபதி டி. ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுதான் இவ்வழக்கை விசாரித்தது.

பெண் ராணுவ அலுவலர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் வி. மோகனா, மீனாட்சி அரோரா, ஹூசெஃபா அகமதி ஆகியோர், "பெண் அலுவலர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது உச்ச நீதிமன்றம் மார்ச் மாதம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது. அளவுகோல்களை பூர்த்தி செய்த குறுகிய கால சேவை ஆணையத்தின் அனைத்து அலுவலர்களுக்கும் நிரந்தர ஆணையத்தில் இடம் அளிக்க இந்திய ராணுவத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது" என்றார்.

இதனிடையே, நிரந்தர ஆணையம் தொடர்பான செயல்முறையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு வழங்கியுள்ளது.


 

Tags : supreme court permanent commission
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT