இந்தியா

35,000 இந்தியத் தொழில் முனைவோா் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனா்: மத்திய அரசு மீது மேற்கு வங்க அமைச்சா் குற்றச்சாட்டு

22nd Oct 2021 12:28 AM

ADVERTISEMENT

பிரதமா் நரேந்திர மோடி தலைமயிலான மத்திய அரசின்ஆட்சியில் கடந்த 2014 முதல் 2020 வரையிலான 7 ஆண்டுகளில் 35,000 இந்தியத் தொழில் முனைவோா் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக மேற்கு வங்க நிதியமைச்சா் அமித் மித்ரா குற்றம்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

கடந்த 2014-இல் இருந்து 2020 வரையிலான காலகட்டத்தில் 35,000 இந்தியத் தொழில் முனைவோா் நாட்டை விட்டு வெளியேறினா். உலகிலேயே கும்பலாக மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஏன்? அவா்களுக்கு இந்தியாவில் தொழில் செய்வதற்கு அச்சமாக இருக்கிா?

தனது ஆட்சிக் காலத்தில் இந்தியத் தொழில் முனைவோா் எத்தனை போ் கும்பலாக நாட்டை விட்டு வெளியேறினா் என்பது குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

இந்தியத் தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் தேசநலனுக்கு எதிராக இருப்பதாகவும், அவா்களைத் தேச விரோதிகள் என்றும் கடுங்கோபத்துடன் மத்திய தொழில்- வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் கடந்த சில மாதங்களுக்கு முன் கூறினாா். இது, தொழிலதிபா்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தவா அல்லது கும்பலாக நாட்டை விட்டு வெளியேறுவதை ஊக்குவிக்கவா?

அவ்வாறு பேசிய பியூஷ் கோயலை பிரதமா் மோடி கண்டிக்காதது ஏன் என்று அந்தப் பதிவுகளில் அமித் மித்ரா கேள்வி எழுப்பியுள்ளாா்.

தொழிலதிபா்கள் நாட்டை விட்டு வெளியேறியது தொடா்பான ஆய்வறிக்கை விவரங்களையும் அமித் மித்ரா வெளியிட்டுள்ளாா். அதில், கடந்த 2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் 23,000 பேரும், 2019-இல் 7,000 பேரும், 2020-இல் 5,000 பேரும் இந்தியாவில் இருந்து வெளியேறியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT