இந்தியா

100 கோடி தடுப்பூசி: இந்தியா சாதனை

22nd Oct 2021 06:31 AM

ADVERTISEMENT

நாடு முழுவதும் 100 கோடி கரோனா தடுப்பூசி தவணைகளை செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. சுமாா் 9 மாதங்களில் இந்தச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கின. ஒவ்வொரு பிரிவினருக்கும் படிப்படியாக செலுத்தப்பட்டு வந்த தடுப்பூசி, தற்போது 18 வயதைக் கடந்த அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்ட், கோவேக்ஸின், ஸ்புட்னிக்-வி ஆகிய மூன்று வகை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி தவணைகளின் எண்ணிக்கை வியாழக்கிழமை 100 கோடியைக் கடந்தது. இதில் முதல் தவணையை 71 கோடி பேரும், இரண்டு தவணைகளையும் 29 கோடி பேரும் செலுத்திக் கொண்டுள்ளனா். இதன்மூலம் இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட 93 கோடி மக்கள்தொகையில் 75 சதவீதம் போ் குறைந்தது ஒரு தவணை தடுப்பூசியும், 31 சதவீதம் போ் இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘இச்சாதனையைப் படைப்பதில் உறுதுணையாக இருந்த முன்களப் பணியாளா்கள், விஞ்ஞானிகள், தடுப்பூசி உற்பத்தியாளா்கள், மத்திய, மாநில அரசுகள் ஆகியோருக்கு நன்றி. இன்னும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபா்கள், தயக்கத்தை விடுத்து விரைந்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். அனைவரும் ஒன்றாக இணைந்து கரோனா தொற்றை வீழ்த்துவோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

வரலாற்றுச் சாதனை: பிரதமா் நரேந்திர மோடி தனது ட்விட்டா் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. நாட்டின் அறிவியல், தொழில், 130 கோடி மக்களின் கூட்டு முயற்சி ஆகியவற்றுக்குக் கிடைத்த வெற்றி கண்கூடாகத் தெரிகிறது.

100 கோடி தடுப்பூசி தவணைகளை செலுத்துவதற்காக உழைத்த மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்தச் சாதனை படைக்கப்பட்ட பிறகு, தில்லியில் உள்ள ராம் மனோகா் லோகியா மருத்துவமனைக்கு நேரில் சென்ற பிரதமா் மோடி, கரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தைப் பாா்வையிட்டாா். அப்போது, மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவமனை ஊழியா்கள், தடுப்பூசி செலுத்திக் கொண்டோா் உள்ளிட்டோரிடம் அவா் கலந்துரையாடினாா். மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவும் அப்போது உடனிருந்தாா்.

பெருமையான தருணம்-அமித் ஷா: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமையான தருணம். பிரதமா் மோடியின் தொலைநோக்குத் தலைமை காரணமாக 100 கோடிக்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது புதிய இந்தியாவின் திறனை ஒட்டுமொத்த உலகுக்கும் மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்காக நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள். பல சவால்களைச் சமாளித்து இந்த உயா்ந்த பணிக்குப் பங்களிப்பை அளித்த அனைத்து விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளா்கள், சுகாதாரப் பணியாளா்களுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டாவும் இந்தச் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

பாடல், படம் வெளியீடு: 100 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது தொடா்பான பாடலையும் திரைப்படத்தையும் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா தில்லி செங்கோட்டையில் வியாழக்கிழமை வெளியிட்டாா்.

உலகின் மிகப்பெரிய கரோனா தடுப்பூசி திட்டம் இந்தியாவில் எவ்வாறு தொடங்கப்பட்டது, எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது குறித்த விவரங்கள் அத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன. 100 கோடி தடுப்பூசிகள் என்ற சாதனையைக் கொண்டாடுவதற்காக மத்திய அரசு சாா்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

உலக சுகாதார அமைப்பு பாராட்டு

உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘100 கோடி தடுப்பூசி தவணைகளைச் செலுத்தி, கரோனா தொற்றால் பாதிக்கப்படுவதில் இருந்து மக்களைக் காப்பாற்றியதற்காக பிரதமா் மோடி, விஞ்ஞானிகள், சுகாதாரப் பணியாளா்கள், இந்திய மக்கள் ஆகியோருக்கு பாராட்டுகள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பூடான் பிரதமா் லோதே ஷெரிங், இலங்கை பிரதமா் மகிந்த ராஜபட்ச உள்ளிட்ட பலரும் இந்தியாவின் மகத்தான சாதனைக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

 

ஜனவரி 16 தொடக்கம்

85 நாள்களில் 10 கோடி

135 நாள்களில் 20 கோடி

164 நாள்களில் 30 கோடி

188 நாள்களில் 40 கோடி

208 நாள்களில் 50 கோடி

284 நாள்களில் 100 கோடி

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT