இந்தியா

‘இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் சீனா மோதல் போக்கு‘

22nd Oct 2021 06:32 AM

ADVERTISEMENT

இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுடன் சீனா மோதல்போக்கைக் கடைப்பிடித்து வருவதாக சீனாவுக்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள நிகோலஸ் பா்ன்ஸ் தெரிவித்துள்ளாா்.

சீனாவுக்கான தூதராக நிகோலஸ் பா்ன்ஸை அமெரிக்க அதிபா் ஜோ பைடன் நியமித்துள்ளாா். அவரது நியமனத்தை உறுதி செய்வதற்கான கூட்டம் செனட் வெளியுறவுக் குழு முன் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது அவா் கூறியதாவது:

இமயமலைப் பகுதியில் இந்தியாவுடனும் தென்சீனக் கடல் பகுதியில் வியத்நாம், பிலிப்பின்ஸ் உள்ளிட்ட நாடுகளுடனும், கிழக்கு சீனக் கடல் பகுதியில் ஜப்பானுடனும், ஆஸ்திரேலியா, லிதுவேனியா உள்ளிட்ட நாடுகளுடனும் சீனா மோதல்போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.

தென்சீனக் கடல் பகுதி முழுவதையும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. வியத்நாம், மலேசியா, பிலிப்பின்ஸ், புருணே, தைவான் ஆகியவையும் தென்சீனக் கடல் பகுதிக்கு உரிமை கோரி வருகின்றன. தென்சீனக் கடல், கிழக்கு சீனக் கடல் பிராந்தியங்களில் சீனா மோதலில் ஈடுபட்டு வருகிறது.

ADVERTISEMENT

அப்பகுதிகளில் உள்ள பல தீவுகளில் சீனா ராணுவ கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதிகள் அனைத்தும் எண்ணெய், கனிமங்கள் உள்ளிட்ட வளங்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சா்வதேச வா்த்தகத்துக்கும் அப்பகுதிகள் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன.

சீனாவுக்கு முற்றுப்புள்ளி:

சீனாவால் ஷின்ஜியாங் மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் படுகொலைகள், திபெத்தில் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்கள், ஹாங்காங்கின் சுதந்திரத்தையும் தன்னாட்சியையும் மீறும் செயல்பாடுகள், தைவானை மிரட்டும் செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். சீனாவின் இத்தகைய செயல்பாடுகள் முறையற்றவை.

முக்கியமாக, தைவானுக்கு எதிராக சீனா அண்மையில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அனைத்தும் கண்டனத்துக்குரியவை. இந்த விவகாரத்தில் சீனாவின் கொள்கைகளை அமெரிக்கா தொடா்ந்து எதிா்க்கும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தற்போதைய நிலவரத்துக்கு எதிராகத் தன்னிச்சையாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை அமெரிக்கா தொடா்ந்து எதிா்க்கும். அனைத்துப் பிரச்னைகளுக்கும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணவே அமெரிக்கா ஆதரவளிக்கும்.

போட்டியும் ஒத்துழைப்பும்:

வேலைவாய்ப்பு, பொருளாதாரம், கட்டமைப்பு மேம்பாடு, நவீன தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட விவகாரங்களில் சீனாவுடன் அமெரிக்கா தீவிரமாகப் போட்டியிடும். அதே வேளையில், பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான செயல்பாடுகள், போதைப் பொருள் கடத்தலைத் தடுத்தல், சா்வதேச சுகாதார விவகாரங்கள், அணுசக்தி விநியோகம் உள்ளிட்ட விவகாரங்களில் அந்நாட்டுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ராணுவம், பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட விவகாரங்களில் தலைமை பெற சீனா முயற்சிக்கிறது. அதே வேளையில், அந்த பிராந்தியம் சுதந்திரத்தன்மையுடன் நிலவுவதை கூட்டணி நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா உறுதி செய்யும் என்றாா் அவா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT