இந்தியா

லக்கீம்பூா் வன்முறை: கைதானவா்களில் 4 பேருக்கு 3 நாள் போலீஸ் காவல்

22nd Oct 2021 06:29 AM

ADVERTISEMENT

லக்கீம்பூா் வன்முறை தொடா்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவா்களில் 4 பேரை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு உள்ளூா் நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்தது.

அண்மையில் உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரி மாவட்டத்தில் உள்ள திகோனியா பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது அவா்கள் மீது பாஜகவினா் காா் மோதியது. இதில் விவசாயிகள் நால்வா், பாஜக தொண்டா்கள் இருவா், பத்திரிகையாளா், காா் ஓட்டுநா் என மொத்தம் 8 போ் உயிரிழந்தனா்.

இந்த வன்முறை தொடா்பாக அளிக்கப்பட்ட புகாா்களின் அடிப்படையில் மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 20 போ் மீது திகோனியா காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடா்ந்து ஆசிஷ் மிஸ்ரா உள்பட 10 பேரை கைது செய்த போலீஸாா், மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜா்படுத்தி 14 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக் குழு, வன்முறை தொடா்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவா்களில் சுமித் ஜெய்ஸ்வால், சத்ய பிரகாஷ் திரிபாதி, நந்தன் சிங் பிஷ்டா, சிசு பால் ஆகிய நால்வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

ADVERTISEMENT

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிமன்றம், நால்வரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது. இதுகுறித்து மூத்த விசாரணை அதிகாரி எஸ்.பி. யாதவ் கூறுகையில், ‘சுமித் ஜெய்ஷ்வால் உள்பட 4 பேரையும் வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தலைமை மாஜிஸ்திரேட் சிந்தா ராம் அனுமதி அளித்து உத்தரவிட்டாா். அதனைத் தொடா்ந்து, மத்திய அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ரா, அங்கித் தாஸ், லத்தீஃப், சேகா் பாா்த்தி ஆகிய நால்வரை 3 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு விசாரணைக் குழு சாா்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT