இந்தியா

மின்சார வாகனங்களுக்கு வரி குறைப்பு கேட்கும் டெஸ்லா; என்ன சொல்ல போகிறது பிரதமர் அலுவலகம்?

21st Oct 2021 12:39 PM

ADVERTISEMENT

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என டெஸ்லா நிறுவனம் பிரதமர் அலுவலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இந்தியாவின் உள்நாட்டு நிறுவனங்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

இந்தாண்டு முதல், இறக்குமதி செய்து கார்களை விற்க டெஸ்லா நிறுவனம் விரும்புகிறது. ஆனால், உலகிலேயே அதிக வரி விதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என டெஸ்லா கவலை தெரிவித்துள்ளது. முன்னதாக, வரி குறைப்பு கேட்டு டெஸ்லா கோரிக்கை விடுத்ததாக ஜூலை மாதம் ராய்ட்டர்ஸில் செய்தி வெளியானது.

இது, உள்ளூர் உற்பத்தியில் மேற்கொள்ளப்படும் முதலீட்டை கெடுத்துவிடும என உள்ளூர் நிறுவனங்கள் ஆட்சேபனை தெரிவித்தன. இதனிடையே, கடந்த மாதம், டெஸ்லா இந்திய தலைவர் மனோஜ் குரானா உள்பட நிர்வாகிகள் சிலர், பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற ரகசிய சந்திப்பில் வரி குறைப்பு குறித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

அப்போது, "இந்தியாவில் உள்ள வரி கட்டமைப்பு டெஸ்லா வணிகம் செய்வதற்கான திட்டத்திற்கு ஏதுவாக இல்லை" என நிர்வாகி ஒருவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை, 40,000 அமெரிக்க டாலர்கள் அல்லது அதற்கு குறைவாக உள்ள மின்சார வாகனங்களுக்கு 60 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. 40,000 அமெரிக்க டாலர்களுக்கு அதிகமான விற்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதன் காரணமாக, டெஸ்லா கார்கள் அதிக விலைக்கு விற்க நேரிடும் என்றும் அவர்களின் விற்பனையில் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். இதற்கு மத்தியில், பிரதமர் மோடியை சந்தித்து டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க் இதுகுறித்து ஆலோசனை நடத்த நிர்வாகிகள் சார்பில் நேரம் கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க'வரலாற்று நாள்' - 100 கோடி தடுப்பூசி செலுத்தியது குறித்து பிரதமர் மோடி ட்வீட்

டெஸ்லா நிறுவனமும் பிரதமர் அலுவலகமும் இதுகுறித்து இன்னும் கருத்து கூறவில்லை. அதேபோல, டெஸ்லா நிறுவனத்திடம் பிரதமர் அலுவலகம் என்ன பதில் அளித்தது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. ஆனால், டெஸ்லா நிறுவனத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அரசு அலுவலர்களுக்கிடையே மாற்று கருத்து நிலவுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வரி குறைப்பு மேற்கொள்வதற்கு முன்பு, உள்ளூர் நிறுவனங்களை கருத்தில் கொண்டு டெஸ்லா நிறுவனம் அவர்களுக்கு சில உறுதிமொழிகளை அளிக்க வேண்டும் என அரசு அலுவலர்கள் விரும்புகின்றனர்.

Tags : Tesla PMO
ADVERTISEMENT
ADVERTISEMENT