இந்தியா

உத்தரகண்ட் கனமழைக்கு 64 பேர் பலி: மத்திய அமைச்சர் அமித்ஷா

21st Oct 2021 08:34 PM

ADVERTISEMENT

உத்தரகண்ட் கனமழைக்கு 64 பேர் பலியாகியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 
உத்தரகண்டில் இரண்டு நாளாக பெய்த பலத்த மழையால் பல்வேறு பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மழையைத் தொடா்ந்து பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக சாலைகள் பாறைகளால் மறிக்கப்பட்டுள்ளன. பல கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள்களாக பெய்த மழை புதன்கிழமை ஓய்ந்தது. எனினும் இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்பதிலும் சாலைகள், மின்சார இணைப்புகளை மறுசீரமைப்பதிலும் அதிகாரிகளும் பணியாளா்களும் இன்னலை எதிா்கொண்டனா். மாநிலத்தில் தேசிய பேரிடா் மீட்புப் படையின் 17 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 
சுற்றுலாத் தலமான நைனிடாலில் செவ்வாய்க்கிழமை 445 மி.மீ. மழை பெய்தது. மாநிலத்தில் மழையால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளில் நைனிடாலில் மட்டும் 29 போ் பலியாகியுள்ளனா். இந்த நிலையில் உத்தரகண்ட் வெள்ளப் பாதிப்புகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு இன்று ஆய்வு செய்தார். அப்போது உத்தரகண்ட் ஆளுநர் குர்மீத் சிங், முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோரும் உடனிருந்தனர். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமித்ஷா பேசியதாவது, உத்தரகண்டில் கனமழைக்கு 64 பேர் பலியாகியுள்ளனர். 11 பேர் மாயமாகியுள்ளனர். 

இதையும் படிக்க- உ.பி. யில் மாணவிகளுக்கு ஸ்மார்ட்ஃபோன், ஸ்கூட்டி: பிரியங்கா காந்தி தேர்தல் வாக்குறுதி

3,500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர் மற்றும் பதினாறாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் முன்னெச்சரிக்கையாக தங்கவைக்கப்பட்டனர். 24 மணி நேரத்திற்கு முன்னதாக மத்திய அரசு எச்சரிக்கையை வெளியிட்டதைத் தொடர்ந்து, மாநில பேரிடர் நிவாரணப் படை, தேசிய பேரிடர் நிவாரணப் படை, இந்திய-திபெத் எல்லையோரப் படை, ராணுவம், விமானப்படைக்கு மாநில அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகம் எச்சரிக்கைகள் அனுப்பியதால் பெரும் சேதத்தைத் தடுக்க முடிந்தது. இதுவரை சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த உயிர் சேதமும் இல்லை. 
ஓரிரு நாட்களில் நிலைமை இயல்பு நிலைக்கு வந்தவுடன், உள்துறை அமைச்சகத்தின் கணக்கெடுப்புக் குழுக்கள் மாநிலத்திற்கு வந்து சேதத்தை மதிப்பீடு செய்து அதற்கேற்ப உதவி வழங்கப்படும். மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் மத்திய பங்காக ரூ 749.60 கோடியை மத்திய அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில், மத்திய அரசு உங்களுடன் முழுமையாக உள்ளது என்றார்.

Tags : Amit Shah
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT