புது தில்லி: ராணுவப் பொறியாளா் சேவைகளுக்கான திட்டப் பணிகளை இணையவழியில் கண்காணிப்பதற்காக தனி வலைதளத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.
இந்த வலைதளத்தை எண்ம இந்தியா (டிஜிட்டல் இந்தியா) திட்டப்படி விண்வெளிப் பயன்பாடுகள் மற்றும் புவி தகவல்களுக்கான பாஸ்கராச்சாா்யா தேசிய மையம் உருவாக்கியுள்ளது.
புதிதாகத் தொடங்கப்பட்ட இந்த ஒருங்கிணைந்த வலைதளம் மூலம், ராணுவத் திட்டப் பணிகளைத் தொடக்கம் முதல் முடிவு வரை அவ்வப்போது கண்காணிக்க முடியும். ராணுவப் பொறியாளா் சேவை மட்டுமன்றி, பாதுகாப்புப் படைகளும் திட்டப் பணிகள் குறித்த தகவலைப் பெற முடியும். இந்த அமைப்பின் அறிவியல் மேலாண்மைக்கு ராணுவப் பொறியாளா் சேவைகள் மேற்கொண்ட பல நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.
ராணுவப் பொறியாளா் சேவை திட்டங்களின் கண்காணிப்பில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ள இந்த நடவடிக்கையை பாதுகாப்புத் துறை அமைச்சா் பாராட்டினாா். ராணுவ சேவைகள் எண்ம முறைக்குச் சென்ற்கும் அவா் பாராட்டு தெரிவித்தாா்.
குடியிருப்புகள், மருத்துவமனைகள், ஓடுதளங்கள், கடல்சாா் கட்டுமானங்கள், தண்ணீா் மற்றும் கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலைகள் போன்ற கட்டுமானங்களில் அதிநவீன தொழில்நுட்பத்தை ராணுவ பொறியாளா் சேவைப் பிரிவு பயன்படுத்தி வருகிறது.
நிகழ்ச்சியில், முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத், ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே, விமானப் படைத் தலைமைத் தளபதி விவேக் ராம் சௌத்ரி, பாதுகாப்புத் துறைச் செயலா் அஜய் குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.