இந்தியா

காஸியாபாத்: மாடியிலிருந்து விழுந்த இரட்டையர்கள் பலி; பல கோணங்களில் விசாரணை

PTI


காஸியாபாத்: காஸியாபாத், உயர்தர சித்தார்த் விஹார் அடுக்குமாடிக் குடியிருப்பின் 25வது மாடியிலிருந்து விழுந்து இறந்த இரட்டைச் சகோதரர்களின் மரணத்தை பல கோணங்களில் காவலர்கள் விசாரித்து வருகிறார்கள்.

இரட்டையர்கள் பால்கனியிலிருந்து விழுந்தது எதிர்பாராதவிதமாக நடந்த அசம்பாவிதம் என்றும், இதில் சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை என்று அவர்களது பெற்றோர் புகார் கொடுக்க மறுத்துவிட்ட போதும், இந்த மரணச் சம்பவத்தில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரி மஹிபால் சிங் கூறியுள்ளார்.

இரட்டைச் சிறுவர்களான 14 வயது சத்ய நாராயண் மற்றும் சூர்யா இருவரும் கடந்த சனிக்கிழமை இரவு தங்களது அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டின் பால்கனியிலிருந்து விழுந்து உயிரிழந்தனர்.

சிறுவர்கள் கீழே விழுந்த போது, கேட்ட சத்தத்தால் ஓடிச் சென்று பார்த்த குடியிருப்புக் காவலாளி, இருவரும் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததைப் பார்த்துள்ளார். சிறுவர்கள் விழுந்த இடத்திலிருந்து பார்த்த போது 25வது மாடியில் மட்டும் விளக்கெறிந்து கொண்டிருந்ததால், அங்குச் சென்று வீட்டிலிருந்த பெண்ணிடம் அவரது மகன்கள் பற்றி கூறியதும்தான், அவருக்கு தனது மகன்கள் இறந்த விஷயமே தெரிய வந்துள்ளது.

சிறுவர்களின் தந்தை டி.எஸ். பழனி, தமிழகத்தின் பழனியைச் சேர்ந்தவர். இவர் 6 மாதங்களுக்கு முன்புதான் இந்த குடியிருப்பை வாங்கி, தனது மனைவி, மகள், பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். அவர், அன்றைய தினம்தான் அங்கிருந்து புறப்பட்டு மும்பைச் சென்றுள்ளார். சம்பவம் குறித்து அறிந்ததும் திரும்பி வந்த பழனி, தங்களது பிள்ளைகளின் மரணத்தில் எந்த சந்தேகமும் இருப்பதாகத் தோன்றவில்லை. விபத்துதான் என்று கூறி புகார் அளிக்க மறுத்துவிட்டார்.

பால்கனியிலிருந்து நிலவைப் பார்க்க நாற்காலி மீது ஏறி நின்றிருக்கும் போது, ஒருவன் தவறி விழுந்திருக்கலாம், அவனைக் காப்பாற்ற முயன்ற மற்றொருவரும் விழுந்திருக்கலாம் என்றே தாங்கள் கருதுவதாகக் கூறியுள்ளார்.

எனினும், இது விபத்தா? தற்கொலையா? கொலையா? என்ற கோணத்தில் காவல்துறையினர் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

அம்பையில் வாழைத்தாா் உறையிடுதல் செயல்விளக்கம்

SCROLL FOR NEXT