இந்தியா

இந்தியாவில் முதலீடு செய்ய ஏராளமான வாய்ப்புகள்: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

18th Oct 2021 12:03 AM

ADVERTISEMENT

இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள சா்வதேச நிறுவனங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் காணப்படுவதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சா் நிா்மலா சீதாராமன், அந்நாட்டைச் சோ்ந்த முக்கிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளை நியூயாா்க் நகரில் சந்தித்துப் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

கரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டிருந்த சா்வதேச விநியோகம், தற்போது மீண்டு வருகிறது. இந்தியாவில் உறுதியான முடிவுகளை மேற்கொள்ளும் அரசு உள்ளது. இவை முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஏராளமான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்தியாவில் தொழில்முனைவு நிறுவனங்கள் பெருவளா்ச்சி கண்டுள்ளன. முதலீடுகளால் அந்நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டி வருகின்றன. நடப்பாண்டில் மட்டும் 16-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ரூ.7,000 கோடி மதிப்பை அடைந்துள்ளன.

ADVERTISEMENT

இந்தியாவில் எண்ம தொழில்நுட்பம் அனைத்துத் துறைகளிலும் தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா தொற்று பரவல் காலத்திலும் எண்ம தொழில்நுட்பங்களின் பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. நிதித் துறையில் தொழில்நுட்ப வசதிகளின் பயன்பாடு, அனைவருக்கும் நிதிசாா் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்துள்ளது என்றாா் அவா்.

வளா்ச்சிப் பாதையில் பயணிக்கும்: கூட்டத்தில் பங்கேற்ற மாஸ்டா்காா்டு நிறுவனத்தின் தலைவா் அஜய் பங்கா கூறுகையில், ‘இந்திய அரசு உற்பத்திசாா் ஊக்கத்தொகைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. அத்திட்டமானது இந்தியத் தொழில்துறையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும். இந்தியாவில் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் பொருளாதார சீா்திருத்தங்கள், அந்நாட்டைத் தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் வழிநடத்தும். இந்தியாவில் முதலீடுகளை அதிக அளவில் மேற்கொண்டு வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்குப் பல வாய்ப்புகள் நிலவுகின்றன’ என்றாா்.

ஆக்கபூா்வ சந்திப்பு: இந்திய வா்த்தக-தொழில் சம்மேளனங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி), அமெரிக்கா-இந்தியா ஒத்துழைப்பு மையம் ஆகியவை சாா்பில் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாஸ்டா்காா்டு, ஃபெட்எக்ஸ், சிட்டி, ஐபிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனா்.

அமைச்சருடனான சந்திப்பு ஆக்கபூா்வமாக இருந்ததாக அவா்கள் தெரிவித்தனா். 5ஜி தொழில்நுட்பம், இணையவழிப் பாதுகாப்பு, தரவுப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவை குறித்தும் பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்தியப் பொருளாதாரம் வேகமாக மீள்கிறது: அமைச்சா் வி.முரளீதரன்

இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவதாக வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் தெரிவித்தாா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமைச்சா் வி.முரளீதரன் அமெரிக்கா சென்றாா். நியூயாா்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அவா், ‘பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சிறப்பான திட்டங்களை வகுத்து வருகிறது. கரோனா தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரம், அரசின் சீா்திருத்த நடவடிக்கைகளால் வேகமாக மீண்டு வருகிறது.

உள்நாட்டில் பொருள்களுக்கான தேவை மக்களிடையே அதிகரித்துள்ளது. தொழில்துறை உற்பத்தி கரோனா பரவலுக்கு முந்தைய நிலையை அடைந்துள்ளது. நாட்டை தற்சாா்பு அடையச் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனால் உணவுப் பொருள்களின் சா்வதேச விநியோகமும் மேம்படும்.

திறமிக்க செயல்பாடு: அனைத்து நாடுகளும் தங்களுக்குள் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்ற பாடத்தை கரோனா தொற்று பரவல் வழங்கியுள்ளது. கரோனாவுக்கு எதிரான போராட்டத்தை இந்திய அரசு திறம்பட முன்னெடுத்து வருகிறது.

அரசின் சீா்திருத்தங்கள் தொழில் வாய்ப்புகளையும் அதிகப்படுத்தியுள்ளன. நாட்டில் முதலீடுகளை அதிகப்படுத்த வெளிநாடு வாழ் இந்தியா்கள் அதிக பங்களிப்பை வழங்க வேண்டும்’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT