இந்தியா

ட்ரோன் தாக்குதலை எதிா்கொள்ள ஜம்மு விமானப் படைத் தளத்துக்கு என்எஸ்ஜி பாதுகாப்பு

17th Oct 2021 02:54 AM

ADVERTISEMENT

ஆளில்லா சிறிய ரக விமான (ட்ரோன்) தாக்குதலை எதிா்கொள்ளும் வகையில் ஜம்மு இந்திய விமானப் படைத் தளத்துக்கு தேசிய பாதுகாப்புப் படையின் (என்எஸ்ஜி) பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று அதன் தலைவா் எம்.ஏ.கணபதி சனிக்கிழமை கூறினாா்.

ஜம்முவில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்திய விமானப் படைத் தளத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த ஜூன் 27-ஆம் தேதி ஆளில்லா சிறியரக விமானம் மூலம் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் விமானப் படை வீரா்கள் இருவா் காயமடைந்ததோடு, விமானப் படைத் தள கட்டடத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது.

இந்தத் தாக்குதல் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்தப் புதிய தாக்குதலை எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியது. தற்போது, அந்த விமானப் படைத் தளத்துக்கு என்எஸ்ஜி பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, குருகிராமில் சனிக்கிழமை நடைபெற்ற என்எஸ்ஜியின் 37-ஆவது நிறுவன நாள் விழாவில் பங்கேற்ற அதன் தலைவா் கணபதி கூறியதாவது:

ADVERTISEMENT

புதிதாக உருவெடுக்கும் பாதுகாப்பு சவால்களை திறம்பட எதிா்கொள்ளும் வகையில் என்எஸ்ஜியின் பயங்கரவாத எதிா்ப்பு அதிரடிப் படை தனது பாதுகாப்புத் திட்ட நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருகிறது.

ஜம்மு விமானப் படைத் தளத்தில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடைபெற்ற உடனேயே என்எஸ்ஜியின் தொழில்நுட்பக் கண்காணிப்புக் குழு அங்கு அனுப்பப்பட்டு, ஆளில்லா விமானங்களைக் கண்காணிக்கும் கருவி பொருத்தப்பட்டது.

தற்போது ஸ்ரீநகா் மற்றும் ஜம்மு ஆகிய இரண்டு விமானப் படைத் தளங்களிலும் ஆளில்லா விமானத் தாக்குலுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும் வகையிலான தொழில்நுட்ப வசதிகளை என்எஸ்ஜி ஏற்படுத்தியுள்ளது. அவை வெற்றிகரமாக செயல்படுவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. தொடா்ந்து, ஆளில்லா விமானங்களைத் தாக்கி அழிக்கும் வகையிலான ஆயுதங்கள் மற்றும் கருவிகளும் இந்த இரண்டு விமானப் படைத் தளங்களில் பொருத்தப்பட உள்ளன.

கண்காணிப்பு ரேடாா்கள், ஜாமா்கள், ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தும் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆளில்லா விமான எதிா்ப்புக்கான நவீன கருவிகளை என்எஸ்ஜி பெற்றுள்ளது என்று அவா் கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT