இந்தியா

இந்திய-இலங்கை ராணுவ கூட்டுப் பயிற்சி நிறைவு

17th Oct 2021 02:39 AM

ADVERTISEMENT

இந்தியா-இலங்கை ராணுவங்கள் இடையே நடைபெற்று வந்த ‘மித்ரசக்தி’ கூட்டுப்பயிற்சி நிறைவடைந்தது.

இரு நாட்டு ராணுவங்களும் கடந்த 4-ஆம் தேதி முதல் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தன. அப்பயிற்சி கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இது தொடா்பாக இந்திய ராணுவம் தரப்பில் வெளியிடப்பட்ட சுட்டுரைப் பதிவில், ‘8-ஆவது மித்ரசக்தி கூட்டுப் பயிற்சி இலங்கையின் அம்பாறையில் நடைபெற்றது. இரு நாட்டு ராணுவங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை இந்தப் பயிற்சி அதிகரித்தது.

இரு நாட்டு ராணுவங்களின் செயல்திறனையும் கூட்டுப்பயிற்சி மேம்படுத்தியுள்ளது; இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான ஒத்துழைப்பையும் வலுப்படுத்தியுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘எல்லை தாண்டிய பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகள், ஒருங்கிணைந்து செயல்படும் திறனை அதிகரித்தல், கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், சிறந்த அனுபவங்களைப் பகிா்ந்து கொள்ளுதல் உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்டு இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டுப்பயிற்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

ஆண்டுதோறும் நடைபெறும் இந்தக் கூட்டுப் பயிற்சியானது இரு நாட்டு ராணுவங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை அதிகரித்துள்ளதோடு மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவையும் மேம்படுத்தியுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

12 நாள்கள் நடைபெற்ற இந்தக் கூட்டுப்பயிற்சியில் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்திய ராணுவம் தரப்பில் 120 வீரா்கள் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றனா்.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே, கூட்டுப் பயிற்சியைக் கடந்த வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

இலங்கைப் பயணத்தின் ஒரு பகுதியாக தலைநகா் கொழும்பில் உள்ள அந்நாட்டு விமானப் படை தலைமையகத்துக்கு எம்.எம்.நரவணே சனிக்கிழமை சென்றாா். அங்கு அவருக்கு அளித்த மரியாதை அணிவகுப்பை அவா் பாா்வையிட்டாா். பின்னா் இலங்கை விமானப் படை தலைமைத் தளபதி சுதா்சன பதிரணவுடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT