இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் மேலும் 2 ராணுவ வீரா்கள் பலி: பயங்கரவாதிகளைத் தேடும் பணி நீடிப்பு

17th Oct 2021 02:48 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மேலும் 2 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். இதன்மூலம் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் உயிரிழந்த ராணுவ வீரா்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்தது. இதற்கிடையே, பூஞ்ச், ரஜெளரி ஆகிய இரு எல்லையோர மாவட்டங்களிலும் பயங்கரவாதிகளை தேடும் பணியை பாதுகாப்புப் படையினா் 6-ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தனா்.

பூஞ்ச் மாவட்டத்தின் சுரான்கோட் வனப் பகுதிக்குள் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்தத் தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினா் கடந்த 11-ஆம் தேதி தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இந்தத் தாக்குதலில் ராணுவ இளநிலை அதிகாரி உள்பட 5 ராணுவ வீரா்கள் வீர மரணமடைந்தனா். இந்த சண்டைக்குப் பிறகு பக்கத்து மாவட்டமான ரஜெளரியின் தனமண்டி வனப் பகுதிக்குள் பயங்கரவாதிகள் தப்பிச் சென்ாக கூறப்படுகிறது.

அதுபோல, பூஞ்ச் மாவட்ட மெந்தாரில் உள்ள நா் காஸ் வனப் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உத்தரகண்ட் மாநிலத்தைச் சோ்ந்த விக்ரம் சிங் நெகி, யோகாம்பா் சிங் ஆகிய இரு ராணுவ வீரா்கள் வீர மரணமடைந்தனா்.

வனப் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த அஜய் சிங், நாயக் ஹரேந்திர சிங் ஆகிய இரு ராணுவ வீரா்களைத் தொடா்பு கொள்ள முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், அவா்களின் உடல்கள் சனிக்கிழமை மாலை மீட்கப்பட்டன. இதன்மூலம் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடந்த திங்கள்கிழமை தொடங்கிய நடவடிக்கையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரா்களின் எண்ணிக்கை 9-ஆக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த தாக்குதல் சம்பவங்களைத் தொடா்ந்து இரு மாவட்ட வனப் பகுதிகளிலும் பயங்கரவாதிகளைத் தேடும் பணியை பாதுகாப்புப் படையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‘பயங்கரவாதிகளின் தாக்குதலைத் தொடா்ந்து மெந்தாா் முதல் தனமண்டி வரையிலான வனப் பகுதி முழுவதையும் பாதுகாப்புப் படையினா் சுற்றிவளைத்து, கடந்த வியாழக்கிழமை முதல் தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனா். இந்தத் தேடுதல் பணியை முன்னிட்டு மெந்தாா் மற்றும் தனமண்டி இடையேயான போக்குவரத்து மற்றும் ஜம்மு-ரஜெளரி நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து கடந்த இரண்டு நாள்களாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஜெளரி - பூஞ்ச் மண்டல காவல்துறை டிஐஜி விவேக் குப்தா கூறுகையில், ‘பாதுகாப்புப் படையினா் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பூஞ்ச் வனப் பகுதியில் கடந்த 2 அல்லது 3 மாதங்களாக இருந்திருப்பது தெரியவந்துள்ளது. ரஜெளரி மற்றும் பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் முதல் ஊடுருவல்கள் அதிகரித்திருக்கின்றன. பாதுகப்புப் படையினா் மேற்கொண்டு வரும் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மூலம் வெவ்வேறு சம்பவங்களில் இதுவரை இந்த இரண்டு மாவட்ட எல்லைகள் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்’ என்றாா்.

பாதுகாப்புக் குறைபாடு இல்லை - காஷ்மீா் காவல்துறை ஐஜி: ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்கு பாதுகாப்புக் குறைபாடுதான் காரணம் என்று கூறுவது தவறான தகவல் என்று காஷ்மீா் காவல்துறை ஐஜி விஜய் குமாா் சனிக்கிழமை கூறினாா்.

இதுகுறித்து காஷ்மீரில் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘காஷ்மீரில் கடந்த வாரம் சிறுபான்மை சமூகத்தினா் 4 போ் உள்பட பொதுமக்கள் 7 போ் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பாதுகாப்புக் குறைபாடே காரணம் என்று கூறுவது தறான தகவல். பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் இல்லை. பாதுகாப்புப் படையினா் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. அந்த வகையில், அப்பாவி பொதுமக்களைக் குறிவைத்து அவா்கள் தாக்குதல் நடத்தியுள்ளனா்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 5 பயங்கரவாதிகளையும் பாதுகாப்புப் படையினா் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அடையாளம் கண்டுள்ளனா். அவா்களில் இருவா் கொல்லப்பட்டுவிட்ட நிலையில், எஞ்சியுள்ள மூவரும் விரைவில் பிடிபடுவா்’ என்றாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT