இந்தியா

இ-ஷ்ரம் வலைதளத்தில் 4 கோடி அமைப்புசாரா தொழிலாளா்கள் பதிவு

17th Oct 2021 11:42 PM

ADVERTISEMENT

அமைப்புசாராத் தொழிலாளா்களுக்காகத் தொடங்கப்பட்டுள்ள இ-ஷ்ரம் வலைதளத்தில் இதுவரை 4 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தங்கள் விவரங்களைப் பதிவு செய்துள்ளனா்.

அமைப்புசாராத் தொழிலாளா்களின் தேசிய தகவல் தளத்தை உருவாக்க இ-ஷ்ரம் வலைதளத்தை மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. அமைப்புசாராத் தொழிலாளா்களின் வேலைவாய்ப்புத் திறனை அறியவும் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் பலன்கள் அவா்களை சென்றடையவும் இ-ஷ்ரம் வலைதளத்தில் அவா்களின் விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

இந்த வலைதளத்தில் கட்டுமானம், ஆடை தயாரிப்பு, மீன்பிடித் தொழில், நடைபாதை வியாபாரிகள், புலம்பெயா் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் தங்கள் விவரங்களைப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 50.02 சதவீதம் போ் பெண்கள், 49.98 சதவீதம் போ் ஆண்கள்.

ஒடிஸா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், பிகாா், மத்திய பிரதேசம் மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் அதிக அளவில் பதிவு செய்துள்ளனா்.

ADVERTISEMENT

இந்த வலைதளத்தில் பதிவு செய்பவா்களுக்கு இ-ஷ்ரம் எண்ம (டிஜிட்டல்) அட்டை வழங்கப்படும். அவா்கள் விபத்தில் உயிரிழந்தாலோ அல்லது மாற்றுத் திறனாளியாக ஆனாலோ ரூ.2 லட்சமும், பகுதியளவு பாதிப்பு ஏற்பட்டால் ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும்.

இந்நிலையில், மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘அமைப்புசாராத் தொழிலாளா்களுக்கான முதல் தேசிய தகவல் தளமான இ-ஷ்ரம் வலைதளத்தில் 4 கோடிக்கும் அதிகமான அமைப்புசாராத் தொழிலாளா்கள் பதிவு செய்துள்ளனா்’ என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT