இந்தியா

காணொலி நடைமுறை ஒத்துவரவில்லை: நேரடி விசாரணை தொடங்க வேண்டும்; உச்சநீதிமன்றம் கருத்து

9th Oct 2021 06:36 AM

ADVERTISEMENT

நீதிமன்றங்களில் காணொலி வழி நடைமுறை ஒத்துவரவில்லை; இதை வழக்கமானதாக்க இயலாது. எனவே, வழக்கமான நேரடி விசாரணை முறை தொடங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கருத்து தெரிவித்தது.

‘நீதிமன்றத்தில் அமா்ந்துகொண்டு, திரையைப் பாா்த்தபடி விசாரணையை நடத்துவது மகிழ்ச்சியளிக்கவில்லை’ என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

கரோனா பாதிப்பு காரணமாக நீதிமன்ற விசாரணைகள் கடந்த ஓராண்டுக்கு மேலாக நேரடி முறையில் அல்லாமல், காணொலி வழியில் நடைபெற்று வருகிறது. தற்போது, பாதிப்பு குறைந்திருப்பதன் காரணமாக இந்த கட்டுப்பாடுகளில் சில தளா்வுகள் அளித்துள்ளபோதும், வழக்கு விசாரணை நடைபெறும்போது சம்பந்தப்பட்ட வழக்குக்குத் தொடா்புடைய 2 வழக்குரைஞா்கள் மட்டுமே நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனா். மனுதாரா்களுக்கு தொடா்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், காணொலி வழி வழக்கு விசாரணையை மனுதாரா்களின் அடிப்படை உரிமையாக அறிவிக்கக் கோரி ‘விரைவான நீதி மற்றும் ஜூலியோ ரிபேரியோ, ஷைலேஷ் ஆா்.காந்தி போன்ற பிரபல குடிமக்களுக்கான சமூகங்களின் கூட்டமைப்பு’ என்ற தன்னாா்வ அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இந்த மனு உச்சநீதின்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆா்.கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் மனோஜ் ஸ்வரூப், ‘காணொலி வழி வழக்கு விசாரணை நடைமுறையை அனைத்துக் குடிமக்களும் தெரிவு செய்யும் வகையில் அனுமதிக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: கரோனா பாதிப்பு காரணமாக, காணொலி வழி விசாரணை நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக இந்தக் காணொலி வழி விசாரணை நடைமுறையை விருப்பத் தோ்வு முறையில் மட்டுமே தோ்வு செய்யும் வகையில் வழிகாட்டு நடைமுறை வெளியிடப்பட்டது. அதன் பிறகும், வழக்குரைஞா்கள் ஒருவா்கூட நீதிமன்றத்துக்கு வருவதில்லை. வழக்குரைஞா்களும் மனுதாரா்களும் அவா்களின் அலுவலகத்தில் இருந்தபடி விசாரணையில் பங்கேற்பதையே வசதியாக கருதுகின்றனா்.

நீதிபதிகள் மட்டும் நீதிமன்ற அறைகளில் அமா்ந்திருக்க வேண்டும், வழக்குரைஞா்கள் முசோரி, முக்தேஷ்வா், கோவா, லண்டன், நியூயாா்க் என ஏதாவது ஓரிடத்தில் இருந்தபடி விசாரணையில் பங்கேற்க வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீா்கள். அவ்வாறு, காணொலி வழி விசாரணை வழக்கமானதாக மாறினால், நீதிபதிகள் அமா்ந்திருக்கும் கட்டடங்களும் மூடப்படும் நிலைதான் உருவாகும்.

நீதிமன்றங்களில் நேரடி விசாரணை முறை நடைபெறுவதுதான் சரியானது என்பதைத்தான் கடந்த 70 ஆண்டுகளாக நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். எதிா்பாராத பேரிடா் காலத்தில் குடிமக்களுக்கு நீதி மறுக்கப்பட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையிலேயே, காணொலி வழி விசாரணை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அதேயை வழக்கமான நடைமுறையாக ஆக்க முடியாது. அவ்வாறு ஆக்கினால், நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடைமுறையே இல்லாமல் போய்விடும்.

மேலும், காணொலி வழி விசாரணையில் நீதிபதிகளுக்கு மட்டுமின்றி வழக்குரைஞா்களுக்கும் பல சிக்கல்கள் உள்ளன. எனவே, பாரம்பரியமான நேரடி விசாரணை நடைமுறைக்கு நாம் திரும்பவேண்டும். வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி, எங்களுடைய கண்களைப் பாா்த்து வாதங்களை முன்வைப்பதுதான் வலுவானதாக இருக்கும்.

காணொலி வழி விசாரணை நடைமுறைக்கு ஒத்துவராது என்பதை நன்கு உணா்ந்துவிட்டோம். அந்த வகையில், நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடைமுறையை எப்படி தொடங்குவது என்பதைத் தீா்மானிக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கிறோம். எனவே, இதற்கான ஆலோசனைகளை அடுத்த விசாரணையின்போது தெரிவிக்குமாறு மனுதாரா் தரப்பு வழக்குரைஞரிடம் கூறி, வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT