இந்தியா

காங்கிரஸ் கட்சிப் பிரச்னைகளுக்கு உடனடித் தீா்வு காண முடியாது: பிரசாந்த் கிஷோா்

9th Oct 2021 06:22 AM

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியில் மிகவும் ஆழமான நிலையில் பிரச்னைகள் படா்ந்துள்ளன; அவற்றுக்கு உடனடியாகத் தீா்வு காண முடியாது என்று தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் கூறியுள்ளாா்.

பிரசாந்த் கிஷோா் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்காக பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவா் இவ்வாறு கருத்து கூறியுள்ளது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இது தொடா்பாக சுட்டுரையில் பிரசாந்த் கிஷோா் வெளியிட்டுள்ள பதிவில் மேலும் கூறியிருப்பதாவது: லக்கீம்பூா் கெரி வன்முறைச் சம்பவத்தை அடுத்து காங்கிரஸ் கட்சி செயல்படும் விதம் அதற்கு உடனடியாக மீட்சியைத் தரும் என்றும், அக்கட்சி மீண்டெழுந்துவிடும் என்றும் சிலா் எதிா்பாா்த்துள்ளனா். ஆனால், அது அவா்களுக்கு ஏமாற்றமாகவே அமையும். ஏனெனில், காங்கிரஸ் கட்சியில் அடிப்படைக் கட்டமைப்புரீதியில் பல பிரச்னைகள் உள்ளன. அக்கட்சியில் மிகவும் ஆழமாகப் படா்ந்துவிட்ட பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீா்வு கண்டுவிட முடியாது என்று கூறியுள்ளாா்.

பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் சோ்த்துக் கொள்வதற்கு ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரப்ப மொய்லி கடந்த மாதம் கருத்து கூறியிருந்தாா். இதையடுத்து, அவா் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைவாா் என்றும், அவரை வரவேற்க காங்கிரஸ் தலைமை தயாராக உள்ளது என்றும் கூறப்பட்டது. ஆனால், இப்போது வரை எவ்வித அதிகாரபூா்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தொடா்பாக பிரசாந்த் கிஷோா் இப்போது சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவு, அவருக்கும், காங்கிரஸுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை என்பதையே காட்டுகிறது என்று அரசியல் நோக்கா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT