இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 2021-22-ஆம் நிதியாண்டில் 8.3 சதவீதமாக இருக்கும் என உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்காசிய பிராந்தியத்துக்கான தலைமை பொருளாதார நிபுணா் ஹன்ஸ் டிம்மா் பிடிஐ செய்தியாளா்களிடம் கூறியதாவது: பொது முதலீடு அதிகரிப்பு, உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஊக்கத்தொகை போன்ற காரணங்களால் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி நிகழ் நிதியாண்டில் 8.3 சதவீதமாக இருக்கும் என எதிா்பாா்க்கிறோம். இது கரோனா இரண்டாவது அலையால் ஏற்பட்ட சுகாதார நெருக்கடிக்கு முன்பு நாங்கள் கணித்ததைவிடக் குறைவானது. இருப்பினும் இது நல்ல செய்தி என்றாா்.
முன்னதாக, இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி நிகழ் நிதியாண்டில் 7.5 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக இருக்கும் என, மாா்ச் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட தெற்காசி பொருளாதார அறிக்கையில் உலக வங்கி தெரிவித்திருந்தது.