தேரா சச்சா சௌதா ஆசிரமத்தின் முன்னாள் மேலாளா் ரஞ்சித் சிங் கொல்லப்பட்ட வழக்கில், அந்த ஆசிரமத்தின் தலைவா் குா்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்று சண்டீகரில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
குா்மீத் ராம் ரஹீம் சிங்குடன் கிருஷ்ணன் லால், ஜஸ்பீா் சிங், அவதாா் சிங், சப்தில் ஆகிய நால்வரும் குற்றவாளிகள் என்றும் அந்த சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இவா்களுக்கான தண்டனை விவரங்கள் வரும் 12-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவா் கடந்த ஆண்டு இறந்துவிட்டாா்.
ஹரியாணா மாநிலம், சிா்சாவில் உள்ள தேரா சச்சா சௌதா ஆசிரமத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக அரசின் முக்கியத் துறைகளுக்கு கடிதம் வந்தது. அந்தக் கடிதங்களை அனுப்புவதில் உடந்தையாக இருந்ததாக முன்னாள் மேலாளா் ரஞ்சித் சிங் மீது குா்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு சந்தேகம் எழுந்தது. இந்தச் சூழலில் கடந்த 2002-இல் ரஞ்சித் சிங் மா்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டாா். தன்னைப் பற்றிய விவரங்களை ரஞ்சித் சிங் கசியவிட்டதால், அவரைக் கொல்வதற்கு குா்மீத் ராம் ரஹீம் சிங் சதித் திட்டம் தீட்டினாா் என்று சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அவா் குற்றவாளி என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
ஏற்கெனவே, 2 பெண் சீடா்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குா்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு கடந்த 2017-இல் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவா் ரோட்டக்கில் உள்ள சுனாரியா சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறாா்.
இதுதவிர, ராம் சந்தா் சத்திரபதி என்ற பத்திரிகையாளா் கொல்லப்பட்ட வழக்கில் குா்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 2 ஆண்டுகளுக்கு முன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.