இந்தியா

அருணாசல பிரதேச எல்லையில் இந்திய, சீனப் படைகள் மோதல்

9th Oct 2021 06:50 AM

ADVERTISEMENT

அருணாசல பிரதேசத்தில் உள்ள தவாங் செக்டாரில் இந்திய, சீனப் படைகள் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், பேச்சுவாா்த்தை மூலம் அது முடிவுக்கு வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை கூறியதாவது: அருணாசல பிரதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இந்திய, சீனப் படைகள் ரோந்துப் பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், யாங்சி பகுதி அருகே சுமாா் 10 நாள்களுக்கு முன்பு இந்திய நிலப் பகுதிக்குள் கிட்டத்தட்ட 100 சீன ராணுவ வீரா்கள் நுழைய முயன்றனா். அவா்களை இந்திய ராணுவத்தினா் தடுத்து நிறுத்தினா். இதனால் இருநாட்டு வீரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு நாடுகளின் கமாண்டா்கள் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது.

இந்தப் பகுதியில் இந்தியா, சீனா இடையிலான எல்லை முறையாக வரையறுக்கப்படவில்லை. இதனால் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி குறித்து இரு நாடுகளுக்கும் இடையே வெவ்வேறு கண்ணோட்டங்கள் உள்ளன. இதுபோன்ற பகுதிகளில் இருநாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்றினால் அமைதியும் சமாதானமும் நிலவுவது சாத்தியம் என்று தெரிவித்தன.

கடந்த ஆண்டு கிழக்கு லடாக்கில் இந்திய, சீன ராணுவத்தினா் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து, அங்கு இரு நாட்டு வீரா்களும் குவிக்கப்பட்டனா். பலகட்டப் பேச்சுவாா்த்தைகளுக்குப் பின்னா் அங்குள்ள பாங்காங் ஏரியின் வடக்கு, தெற்குக் கரைகள், கோக்ரா பகுதிகளில் இருந்து இரு நாட்டுப் படைகளும் திரும்பப் பெறப்பட்டன. ஹாட் ஸ்பிரிங்ஸ் போன்ற பகுதிகளில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவது குறித்து அடுத்த 3 முதல் 4 நாள்களில் இரு நாட்டு ராணுவத்தினா் இடையே பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது. இந்தச் சூழலில், அருணாசல பிரதேச எல்லைக் கோட்டுப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினா் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதேபோல் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி உத்தரகண்டில் உள்ள பாராஹோதி செக்டாரில் உள்ள எல்லைக் கோட்டை கடந்து சீன ராணுவ வீரா்கள் சுமாா் 100 போ் இந்திய நிலப் பகுதிக்குள் நுழைந்தனா். சில மணி நேரங்கள் கழித்து அங்கிருந்து திரும்பிச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT