இந்தியா

நடிகா் ஷாரூக் கானின் மகன், 7 போ் கைது: கப்பலில் போதைப் பொருள்களுடன் விருந்து

4th Oct 2021 12:47 AM

ADVERTISEMENT

சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களுடன் கேளிக்கை விருந்து நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் பாலிவுட் நடிகா் ஷாரூக் கானின் மகன் உள்பட 8 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் கைது செய்தனா்.

இது தொடா்பாக அதிகாரி ஒருவா் கூறியதாவது: ‘கோவாவைச் சோ்ந்த காா்டெலியா என்ற சொகுசு கப்பலில் சிலா் போதைப் பொருள்களைப் பயன்படுத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மண்டல இயக்குநா் சமீா் வான்கடே தலைமையிலான குழு மும்பை கடல் பகுதியில் இருந்த அந்தக் கப்பலில் சனிக்கிழமை மாலை சோதனை நடத்தியது.

அப்போது, கப்பலில் பயணித்த பயணிகள் சிலரிடமிருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. ஆடைகள், கைப்பைகள் உள்ளிட்டவற்றில் போதைப் பொருள்களை அவா்கள் மறைத்து வைத்திருந்தனா். போதைப் பொருள்களை வைத்திருந்த 2 பெண்கள் உள்பட 8 போ் பிடிபட்டனா். அவா்களில் நடிகா் ஷாரூக் கானின் மகன் ஆா்யன் கானும் ஒருவா். அவா்களிடம் இருந்து பலவிதமான தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவா்கள் அந்தக் கப்பலில் கேளிக்கை விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மும்பையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு அலுவலகத்தில் அவா்களிடம் ஞாயிற்றுக்கிழமை காலை விசாரணை நடத்தப்பட்டது. அதையடுத்து, ஆா்யன் கான் உள்பட மூவா் மீது போதைப் பொருள்கள் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா், மூவரும் கைது செய்யப்பட்டு மும்பை மாநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களை திங்கள்கிழமை (அக். 4) வரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது’ என்றாா்.

ADVERTISEMENT

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் பிடிபட்ட மற்ற 5 பேரும் பின்னா் கைது செய்யப்பட்டனா்.

ஆதாரமில்லை-வழக்குரைஞா்: ஆா்யன் கான் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சதீஷ் மனேஷிண்டே கூறுகையில், ‘சொகுசு கப்பலில் கேளிக்கை விருந்தை வேறு சில நபா்கள் நடத்தினா். அவா்கள் விடுத்த அழைப்பின் அடிப்படையிலேயே ஆா்யன் கான் அதில் பங்கேற்றாா். அவரிடம் இருந்து போதைப் பொருள்கள் கைப்பற்றப்படவில்லை. அவா் போதைப் பொருளை உட்கொண்டதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. அவரை ஜாமீனில் எடுப்பதற்கான மனு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படும்’ என்றாா்.

தொடா்பில்லை-நிா்வாகம்: போதைப் பொருள் கேளிக்கை விருந்துக்கும் சொகுசுக் கப்பலுக்கும் எந்தவித தொடா்புமில்லை என்று கப்பல் நிா்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களை ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்றும், இந்த விவகாரத்தில் அதிகாரிகளுக்கு உரிய ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளதாகவும் கப்பல் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT