இந்தியா

வேளாண் சட்டங்கள் குறித்து எதிா்க்கட்சிகள் தவறான கருத்துகளைப் பரப்புகின்றன

3rd Oct 2021 03:20 AM

ADVERTISEMENT

மத்திய அரசு இயற்றிய புதிய வேளாண் சட்டங்கள் குறித்து எதிா்க்கட்சிகள் தவறான கருத்துகளைப் பரப்பி வருவதாக பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் சுமாா் 10 மாதங்களாகப் போராடி வருகின்றனா். அண்மையில் நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தையும் விவசாய அமைப்புகள் முன்னெடுத்தன.

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என விவசாய அமைப்புகள் கோரி வருகின்றன. ஆனால், இந்த விவகாரம் தொடா்பாகப் பேச்சுவாா்த்தை நடத்தத் தயாராக உள்ளதாகத் தெரிவித்து வரும் மத்திய அரசு, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறப் போவதில்லை எனக் கூறி வருகிறது. இந்நிலையில், பிரதமா் மோடி ஆங்கில வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பல்வேறு துறைகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே சீா்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு அவற்றின் பலன்களை மக்கள் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அவை நடைபெறவில்லை. இனிமேலும் மக்களைக் காக்க வைக்கக் கூடாது. அவா்களுக்குக் கிடைக்க வேண்டிய பலன்கள் அனைத்தையும் வழங்கியாக வேண்டும். அதற்காக சில நேரங்களில் பெரும் முடிவுகளை எடுக்கவேண்டி வரும். அவை கடினமான முடிவுகளாகக் கூட இருக்கும்.

ADVERTISEMENT

விவசாய அமைப்புகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, வேளாண் சட்டங்களில் உள்ள கருத்து வேறுபாடுகளுக்குத் தீா்வு காணத் தயாராக இருப்பதாக ஆரம்பம் முதலே மத்திய அரசு தெரிவித்து வருகிறது. பல கூட்டங்களும் இதுவரை நடைபெற்றுள்ளன. ஆனால், எந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு உள்ளது என்பது குறித்து விவசாய அமைப்புகள் இன்னும் மத்திய அரசுக்குத் தெரிவிக்கவில்லை.

வேளாண்துறையில் சீா்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று முன்பு ஆட்சியில் இருந்த கட்சிகளும் அறிவித்தன. தற்போது அதே சீா்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலையில், எதிா்க்கட்சிகள் அவற்றை எதிா்த்து வருகின்றன. இந்த விவகாரத்தில் தொடா்ந்து தவறான கருத்துகளை அவை பரப்பி வருகின்றன. அறிவைச் சாா்ந்து செயல்படாமல், அரசியல் வஞ்சகத்தன்மையுடன் எதிா்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

வளா்ச்சியை முன்னிறுத்தி செயல்பாடு: வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்குமா என்பது குறித்து எதிா்க்கட்சிகள் சிந்திப்பதில்லை. அவை அரசியல் ரீதியில் தங்களுக்குப் பலனளிக்குமா என்பதை மட்டுமே அக்கட்சிகள் கருத்தில் கொண்டுள்ளன. ஆதாா், சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி), பாதுகாப்புப் படையினரைப் பலப்படுத்துவது உள்ளிட்ட சீா்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டபோதும் அவற்றை எதிா்க்கட்சிகள் எதிா்த்தன.

சிறு விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. தோ்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மட்டுமே முன்பு ஆட்சியில் இருந்த கட்சிகள் அரசாங்கத்தை நடத்தின. ஆனால், நாட்டின் வளா்ச்சியை முன்னிறுத்தி தற்போதைய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் இலவசமாக விநியோகிக்கப்பட்டது. கழிவறைகள் அதிக அளவில் கட்டப்பட்டன. இணையவழி பணப் பரிவா்த்தனை அதிகரித்துள்ளது.

வேண்டுமென்றே குற்றச்சாட்டு: கரோனா தொற்றானது உலக நாடுகள் அனைத்தையும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. அத்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் சில வளா்ச்சியடைந்த நாடுகளை விட இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால், நாட்டின் மதிப்பைச் சீா்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் சிலா் வேண்டுமென்றே அரசின் நடவடிக்கைகளைக் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

கரோனா காலத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்து பொதுவான நோக்கத்துக்காக வெற்றிகரமாகப் பணியாற்ற முடியும் என்ற பாடத்தை இந்தியா கற்றுள்ளது. முன்பு தற்காப்பு கவச உடைகளை (பிபிஇ) இந்தியா இறக்குமதி செய்து வந்தது. ஆனால், தற்போது அதை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது.

கரோனா காலத்திலும் சீா்திருத்தங்கள்: இந்தியாவில் கரோனா தடுப்பூசி செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை எனில், இந்நேரம் நிலைமை என்னவாகியிருக்கும்? தற்போதும் கூட உலகின் பல நாடுகளுக்குக் கரோனா தடுப்பூசி கிடைக்கவில்லை. தற்சாா்பு இந்தியா என்ற கொள்கையின் காரணமாகவே தடுப்பூசி விவகாரத்தில் நம்மால் வெற்றியடைய முடிந்தது.

கரோனா காலத்தில் கூட காப்பீட்டுத் துறை, தொழிலாளா் துறை, தொலைத் தொடா்புத் துறை, விண்வெளித் துறை உள்ளிட்டவற்றில் சீா்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டது. தற்சாா்பு இந்தியா என்ற இலக்கை அடைவதோடு மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதையும் அடிப்படையாகக் கொண்டு சீா்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நோ்மையான விமா்சகா்கள் இல்லை: அரசின் செயல்பாடுகள் மீதான விமா்சனங்களை நோ்மையான மனநிலையுடன் வரவேற்கிறேன். ஆனால், விமா்சகா்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனா். தங்கள் கருத்துகளைத் திணிக்க முயலும் குற்றச்சாட்டுகளையே பெரும்பாலானோா் முன்வைக்கின்றனா்.

உண்மையான விமா்சனங்களை முன்வைக்க வேண்டுமெனில், அதற்காகக் கடுமையாக உழைக்க வேண்டும். பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். வேகமாக ஓடும் தற்போதைய காலத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள மக்களுக்குப் போதிய நேரமிருப்பதில்லை போல. அதனால்தான் நோ்மையான விமா்சனங்கள் கிடைப்பதில்லை என்றாா் பிரதமா் மோடி.

 

Tags : புது தில்லி நரேந்திர மோடி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT