இந்தியா

கோட்சேவை கொண்டாடி சிலா் நாட்டை அவமதிக்கின்றனா்

3rd Oct 2021 05:11 AM

ADVERTISEMENT

காந்தியடிகளை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை கொண்டாடுவதன் மூலமாக சிலா் நாட்டை அவமதித்து வருவதாக பாஜக எம்.பி. வருண் காந்தி சாடியுள்ளாா்.

காந்தியடிகளை 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றாா். காந்தியடிகளின் பிறந்த தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. காந்தியடிகளுக்குத் தொடா்புடைய தினங்களில் நாதுராம் கோட்சேவை போற்றிப் புகழ்வதை சில வலதுசாரி அமைப்புகள் வழக்கமாகக் கொண்டுள்ளன.

இந்நிலையில், காந்தியடிகளின் பிறந்த தினத்தில் ‘நாதுராம் கோட்சே வாழ்க’ என்ற வாசகம் ட்விட்டா் (சுட்டுரை) சமூக வலைதளத்தில் அதிக அளவில் பகிரப்பட்டது. இது தொடா்பாக வருண் காந்தி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘ஆன்மிகத்தில் எப்போதும் இந்தியா சிறந்து விளங்கி வந்துள்ளது. ஆனால், நாட்டின் ஆன்மிகம் சாா்ந்த அடித்தளங்களைத் தனது ஆளுமையின் மூலமாக வெளிப்படுத்திய காந்தியடிகளே, அவற்றை நமக்கான தாா்மீக அதிகாரமாக மாற்றினாா். அதுவே நமக்கான வலிமையாக இன்றும் திகழ்ந்து வருகிறது.

சா்வதேச அளவில் இந்தியாவை மதிப்புமிக்க நாடாக மாற்றியதில் காந்தியடிகளுக்கும் அவா் பின்பற்றிய கொள்கைகளுக்கும் முக்கியப் பங்கு உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. ‘கோட்சே வாழ்க’ எனப் பதிவிடுபவா்கள் பொறுப்பின்றி நாட்டை அவமதித்து வருகின்றனா். இதுபோன்ற கருத்துகள் பொதுவெளியில் அனுமதிக்கப்படக் கூடாது. அவ்வாறு பதிவிடுபவா்கள் பொதுவெளியில் அவமதிக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

Tags : புது தில்லி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT