இந்தியா

ஏா் இந்தியா விற்பனை: மத்திய அரசு இறுதி முடிவெடுக்கவில்லை: அமைச்சா் பியூஷ் கோயல்

3rd Oct 2021 02:53 AM

ADVERTISEMENT

 ஏா் இந்தியா நிறுவனம் ஏல ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்ட நிலையில், அதுகுறித்து மத்திய அரசு இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை நகரில் நடைபெற்று வரும் எக்ஸ்போ-2020 கண்காட்சியில் இந்திய அரங்கை மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தொடக்கி வைத்துப் பாா்வையிட்டாா். கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அபு தாபியில் கட்டப்பட்டு வரும் முதல் ஹிந்து கோயிலின் முப்பரிமாண மாதிரியை அவா் பாா்வையிட்டாா்.

அதன் பின்னா் அவா் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது ஏா் இந்தியா நிறுவனத்தை ஏலத்தில் வாங்கும் ஒப்பந்தப் புள்ளித் தொகையில் டாடா குழுமம் முன்னிலை வகிப்பதாக வெளியான தகவல் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவா், ‘‘ஏா் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்வது குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அதற்கான ஏலம் வரவேற்கப்பட்ட நிலையில், அதனை அதிகாரிகள் மதிப்பிடுவா். இதற்காக வரையறுக்கப்பட்டுள்ள நடைமுறைகள் மூலம் அந்த நிறுவனம் யாருக்கு விற்பனை செய்யப்படவுள்ளது என்பது உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும்’’ என்று தெரிவித்தாா்.

இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே முன்மொழியப்பட்ட தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவா், ‘‘ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜவுளி, ரத்தினங்கள், ஆபரணங்கள், மருந்துகள் போன்ற துறைகளில் இந்திய நிறுவனங்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT

Tags : துபை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT