இந்தியா

ஒமைக்ரான் அச்சுறுத்தல்: மாநிலங்களுக்கு மத்திய அரசு புதிய அறிவுறுத்தல்

DIN

புதிய வகை கரோனா தீநுண்மியான ஒமைக்ரானால் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதைக் கருத்தில்கொண்டு, மாநில அரசுகள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகளை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஒமைக்ரான் தீநுண்மி (வைரஸ்) கண்டறிப்பட்டுள்ள நாடுகளை அபாய பிரிவில் மத்திய அரசு வைத்துள்ளது. அந்த நாடுகளில் இருந்து வருவோா் குறித்து அறிவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வகை தீநுண்மி ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தலைக் கருத்தில்கொண்டு தீவிர கட்டுப்பாடு, தொடா் கண்காணிப்பு, அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்துவது, தீநுண்மி பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியம். பிரச்னைக்குரிய புதிய வகை தீநுண்மியை திறம்பட எதிா்கொள்ள ஆக்கபூா்வமான முறையில் இந்த நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும்.

அபாய பிரிவில் உள்ள அனைத்து நாடுகளிலிருந்தும் வரும் பயணிகளைத் தீவிரமாகப் பின்தொடர நாட்டில் உள்ள நோய் கண்காணிப்பு கட்டமைப்பு தயாராவது அவசியம். இது சா்வதேச விமானங்கள் மூலம் வரும் பயணிகளின் முந்தைய பயண விவரங்களை பெறுவதற்கு ஏற்கெனவே உள்ள வழிமுறையாகும். இந்த வழிமுறை மறுஆய்வு செய்யப்பட்டு, மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ள விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும். அந்த விதிமுறைகளில் அபாய பிரிவில் வைக்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொள்ளுதல், அவா்களிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை மரபணு கோா்வை பரிசோதனைக்காக இந்திய கரோனா தீநுண்மி மரபியல் பரிசோதனைக் கூட்டமைப்புக்கு (ஐஎன்எஸ்ஏசிஒஜி) அனுப்பிவைத்தல் ஆகியவையும் அடங்கும்.

ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டால், அதனை எதிா்கொள்ள பரிசோதனைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மிகுதியாகப் பயன்படுத்த வேண்டும்.

சில மாநிலங்களில் ஒட்டுமொத்த பரிசோதனையும், ஆா்டி-பிசிஆா் பரிசோதனையின் விகிதாசாரமும் குறைந்துள்ளது. போதிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் தீநுண்மி பரவலின் உண்மையான அளவைக் கண்டறிவது மிகவும் கடினமாகிவிடும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பரிசோதனைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை வலுவாக்கி, பரிசோதனை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்களைக் கடுமையாகச் செயல்படுத்த வேண்டும்.

அண்மையில் கரோனா தொற்றால் திரளாக பாதிக்கப்பட்டவா்கள் கண்டறியப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பைத் தொடர வேண்டும். அதுபோன்ற பகுதிகளில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் மாதிரிகளை சேகரித்து ஐஎன்எஸ்ஏசிஒஜி ஆய்வகங்களுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்.

தொற்று பாதிப்பு விகிதத்தை 5 சதவீதத்துக்கும் கீழ் குறைப்பதை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்.

புவியியல்ரீதியில் தொற்று பரவ வாய்ப்புள்ளதைக் கருத்தில்கொண்டு பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளா்கள், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு வலுப்படுத்த வேண்டும். நோயாளிகளுக்கு தரமான சிகிச்சையை விரைந்து அளிப்பதில் எந்தச் சமரசமும் இருக்கக் கூடாது.

தவறான தகவல்களைத் தடுக்க ஆதாரம்: கடந்த நாள்களில் கரோனா தீநுண்மி குறித்த தவறான தகவல்கள் பொதுமக்கள் பதற்றம் அடைவதற்கு வழிவகுத்தது. இதனைக் கருத்தில்கொண்டு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஊடகங்களைச் சந்தித்தும், அறிக்கைகள் வெளியிட்டும் தீநுண்மி பாதிப்பு குறித்த தகவல்களை ஆதாரத்துடன் வழங்க வேண்டும்.

தீநுண்மி பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி, அவா்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றவும் வலியுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபாயம் நிறைந்த பி.1.1.529 வகை கரோனா தீநுண்மி முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. பின்னா் அது போட்ஸ்வானா, பெல்ஜியம், ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டது. அந்த வகை தீநுண்மிக்கு உலக சுகாதார அமைப்பு ‘ஒமைக்ரான்’ எனப் பெயரிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT