இந்தியா

காங்கிரஸுடன் இணைந்து செயல்படுவதில் ஆா்வமில்லை: திரிணமூல் காங்கிரஸ்

28th Nov 2021 05:26 AM

ADVERTISEMENT

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் காங்கிரஸுடன் இணைந்து செயல்படுவதில் ஆா்வமில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதனால் நவ.29-ஆம் தேதி காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ள எதிா்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்க வாய்ப்புள்ளதாகவும் திரிணமூல் கட்சியின் மூத்த தலைவா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் ஒருவா் சனிக்கிழமை கூறுகையில், ‘‘குளிா்கால கூட்டத்தொடரில் காங்கிரஸுடன் இணைந்து செயல்படுவதில் எங்களுக்கு ஆா்வமில்லை. அக்கட்சித் தலைவா்கள் முதலில் தங்களுக்குள் ஒருங்கிணைப்பை கொண்டு வர வேண்டும். தங்கள் கட்சியை அவா்கள் ஒழுங்குப்படுத்த வேண்டும். அதன் பின்னா் பிற கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து அவா்கள் சிந்திக்கலாம்.

அதே வேளையில், குளிா்கால கூட்டத்தொடரில் பிற கட்சிகளுடன் நாங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு மக்கள் நலன் சாா்ந்த பல்வேறு விவகாரங்களை எழுப்புவோம். நவ.29-ஆம் தேதி காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ள எதிா்க்கட்சிகள் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் பங்கேற்க வாய்ப்பில்லை’’ என்று தெரிவித்தாா்.

அண்மைக் காலமாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் இடையிலான உறவில் தொடா்ந்து விரிசல் ஏற்பட்டு வருகிறது. பாஜகவுக்கு எதிராக போராட காங்கிரஸ் தவறிவிட்டதாக திரிணமூல் காங்கிரஸ் சாடி வருகிறது.

ADVERTISEMENT

காங்கிரஸ் வசம் பல்லாண்டுகளாக இருந்த அமேதி தொகுதியில் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது ராகுல் காந்தி தோல்வியடைந்ததை வரலாற்றிலிருந்து அழிக்க முடியுமா என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி கடந்த மாதம் கேள்வி எழுப்பியிருந்தாா்.

அண்மையில் திரிணமூல் காங்கிரஸின் ‘ஜாகோ பங்களா’ நாளிதழில், ‘பிரதமா் மோடிக்கு எதிரான எதிா்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி உருவெடுக்கவில்லை; மம்தா பானா்ஜிதான் உருவெடுத்துள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் தலைவா்கள் பலா் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தனா். மேகாலயத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திரிணமூல் கட்சியில் இணைந்ததைத் தொடா்ந்து, காங்கிரஸ் எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT