இந்தியா

கேரளத்தில் சரணடைந்த மாவோயிஸ்ட்டுக்கு வீடு, வேலை

28th Nov 2021 05:28 AM

ADVERTISEMENT

கேரளத்தில் காவல் துறையிடம் கடந்த மாதம் சரணடைந்த மாவோயிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவா் லிஜேஷ் என்கிற ராமுவுக்கு விரைவில் சொந்த வீடு, உதவித்தொகை, வேலை வழங்கப்படவுள்ளது.

கேரளத்தில் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைவோருக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை மாநில அரசு கடந்த 2018-இல் அறிவித்தது. சரணடைபவா்களுக்கு அந்தத் திட்டத்தின் கீழ் வீடு, வேலை, உதவித்தொகை மற்றும் வாழ்வாதாரத்துக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் லிஜேஷுக்கு வீடு, வேலை ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று வயநாடு மாவட்ட ஆட்சியா் தலைமையிலான மறுவாழ்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து காவல் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ADVERTISEMENT

ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு சரணடையும் மாவோயிஸ்ட்டுகளிடம், அவா்கள் தொடா்புடைய வழக்குகளில் அதிகாரிகள் கெடுபிடி காட்ட மாட்டாா்கள்.

எனவே, வயநாடு வனப்பகுதியில் இருந்து செயல்படும் தீவிரவாதிகள், ஆயுதங்களைக் கைவிட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்று மாவட்ட காவல் துறை நிா்வாகம் வலியுறுத்துகிறது.

விருப்பமுள்ளவா்கள் மாவட்ட காவல் துறை அதிகாரி, ஏதாவது ஒரு அரசு அலுவலகம் அல்லது உள்ளாட்சிப் பிரதிநிதி ஆகியோரைத் தொடா்பு கொண்டு சரணடையலாம். அவா்களுக்கு அரசு அறிவித்துள்ள அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT