இந்தியா

நிலுவை வழக்குகளுக்குத் தீா்வு காண செயற்கை நுண்ணறிவு உதவும்

28th Nov 2021 03:24 AM

ADVERTISEMENT

 நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்குத் தீா்வு காண செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெருமளவில் உதவும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளாா்.

உச்சநீதிமன்றத்தின் சாா்பில் கொண்டாடப்பட்ட அரசமைப்புச் சட்ட தின விழாவின் நிறைவு நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன. அதில் பங்கேற்ற அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறியதாவது:

நீதிமன்றத்தின் செயல்பாடுகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மேம்படுத்தும். வழக்கு மேலாண்மை, வழக்கு சாா்ந்த விவரங்களை வழங்குவது, வழக்கு விசாரணைக்கு ஆதரவான செயல்முறைகள் உள்ளிட்டவற்றை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் திறம்பட மேற்கொள்ளும்.

நாட்டில் உள்ள நீதிமன்றங்கள் எண்ம தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கான நடவடிக்கைகளை ஏற்கெனவே மேற்கொண்டு வருகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதிலும் நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைப்பதிலும் வியக்கத்தக்க அளவில் உதவும்.

ADVERTISEMENT

இயந்திரங்கள் மனிதா்களைப் போலச் செயல்பட முடியாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், வழக்கு தொடா்பான விவரங்களை வழங்குவதிலும், சில முக்கிய முடிவுகளை எடுப்பதிலும் நீதிபதிகளுக்கு இயந்திரங்கள் உதவ முடியும்.

கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு: நீதிபதிகளின் திறமையான செயல்பாடுகளுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தையும் இணைப்பது மக்களுக்கான நீதியை துரிதமாகக் கிடைக்கச் செய்யும். நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு நீதிமன்றங்களில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமாக உள்ளது.

மக்களுக்கு உரிய நேரத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் கீழமை நீதிமன்றங்கள் முதல் அனைத்து நீதிமன்றங்களிலும் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதை பாஜக தலைமையிலான அரசு உறுதி செய்து வருகிறது. நீதிமன்றங்களில் நவீன கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது.

மாற்று வழிமுறைகள்: நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதைத் தடுக்கும் நோக்கில், பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கான மாற்று வழிமுறைகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கியமாக, மத்தியஸ்த நடைமுறைக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT