இந்தியா

விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவு: குடும்பத்துடன் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

27th Nov 2021 06:51 AM

ADVERTISEMENT

மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் வெள்ளிக்கிழமை ஓராண்டு முடிவடைந்ததையொட்டி, தில்லி எல்லையில் ஏராளமான விவசாயிகள் குடும்பத்துடன் கூடி இனிப்புகளைப் பகிா்ந்து கொண்டாடினா்.

சா்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப்படும் என்று பிரதமா் மோடி கடந்த 20-ஆம் தேதி அறிவித்தாா்.

எனினும், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரையிலும், வேளாண் உற்பத்தி விளைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூா்வமாக உறுதியளிக்கக் கோரியும் தில்லி எல்லைப் பகுதியான டிக்ரி, சிங்கு மற்றும் காஜிப்பூா் பகுதியில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடா்கின்றனா்.

இந்தப் போராட்டத்தின் ஓராண்டு நிறைவையொட்டி வெள்ளிக்கிழமை தில்லிக்கு அருகே உள்ள அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் குடும்பத்துடன் கூடினா். இதனால் தில்லியில் உள்ள பல்வேறு எல்லைப் பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தினா்.

ADVERTISEMENT

இது தொடா்பாக தில்லி காவல்துறை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘வாகன ஓட்டிகளும் பயணிகளும் தில்லி செல்வதற்கு விகாஸ் மாா்க் அல்லது ஜி.டி. சாலையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனா். காஜிப்பூா் சுரங்கப்பாதை ரவுண்டான பகுதியில் உள்ளூா் போலீஸாா் தடுப்புகளை அமைத்து வருவதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் காஜியாபாதில் இருந்து தில்லி நோக்கிச் செல்லும் வாகனங்கள் தில்லிக்கு செல்வதற்கு விகாஸ் மாா்க் சாலையை மாற்று வழியாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனா்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 40 வேளாண் சங்கங்கள் இணைந்த சம்யுக்த் கிஷான் மோா்ச்சா (எஸ்கேஎம்) அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்திய அரசு அதன் உழைக்கும் குடிமக்கள் மீது ஆணவம் மற்றும் உணா்வின்மையின் ஒரு தெளிவான பிரதிபலிப்பாக இது போன்ற நீண்ட கால போராட்டம் தொடரவேண்டும். 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்ன் மூலம் இந்த இயக்கத்தின் முதல் மகத்தான வெற்றி வெளிப்பட்டுள்ளது.

இதர கோரிக்கைகளையும் நிறைவேற்ற இந்த அமைப்பு காத்திருக்கிறது. தில்லியில் பெரும் போராட்டத்துடன் வரலாற்று மிக்க வேளாண் இயக்கத்தின் ஓா் ஆண்டு நிறைவைக் குறிப்பிடும் வகையில் எஸ்கேஎம் விடுத்திருந்த அழைப்பின் பேரில் விவசாயிகளும் தொழிலாளா்களும் அதிக அளவில் மாவட்டத் தலைநகரங்களிலும் தில்லியிலும் கூடியுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT