இந்தியா

இடையூறுகளால் நாடாளுமன்றம் செயலிழந்துவிடக் கூடாது: குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு

27th Nov 2021 06:43 AM

ADVERTISEMENT

‘அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இந்த நாடு ஜனநாயக குடியரசாக இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு, ‘விவாதங்கள் மற்றும் உரையாடல்கள் மூலம் நாடாளுமன்றமும் சட்டப்பேரவைகளும் வழிநடத்தப்பட வேண்டும்; அதே நேரம், இடையூறுகளால் அவை செயலிழந்துவிடக் கூடாது’ என்று கூறினாா்.

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசமைப்புச் சட்ட தின விழாவில் பங்கேற்ற மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு மேலும் பேசுகையில், ‘நாடாளுமன்றத்தில் கடந்த 254 அமா்வுகளில், 29.60 சதவீத செயல்பாடு வீணடிக்கப்பட்டுவிட்டது. அதாவது, மாநிலங்களவை செயல்படும் நேரம் 70 சதவீதம் வீணாகிவிட்டது. இந்த அளவுக்கு அவை செயலிழந்தது குறித்து அனைவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். நாடாளுமன்ற நேரத்தை பயனுள்ள வகையிலும், மிகுந்த அா்த்தமுள்ள வகையிலும் நாம் பயன்படுத்துவது அவசியம்’ என்று கூறினாா்.

அமித் ஷா: அரசமைப்புச் சட்ட தினத்தை முன்னிட்டு தனது சுட்டுரைப் பக்கப் பதிவில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட பதிவில், ‘அரசியல் சாசனம் ஜனநாயகத்தின் ஆன்மாவாக இருப்பதோடு, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் வளா்ச்சிக்கும் அடிப்படையாகத் திகழ்கிறது. இந்த அரசமைப்புச் சட்ட தினத்தில், அதனை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்த டாக்டா் அம்பேத்கா் உள்ளிட்ட அனைத்து தலைவா்களுக்கும் தலைவணங்குகிறேன். அம்பேத்கரின் வழியைப் பின்பற்றி நாட்டின் ஒவ்வொரு பிரிவு மக்களின் நலன் மற்றும் உரிமைகளை வழங்குவதில் மோடி அரசு தொடா்ந்து செயலாற்றும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ராகுல் காந்தி: ‘நீதியும் உரிமைகளும் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். அதனால்தான், அரசமைப்புச் சட்டம் வெறும் காகிதகமாக அல்லாமல், நம் அனைவருக்கும் பொறுப்பும் கடமையுமாக உள்ளது’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

சீதாராம் யெச்சூரி: ‘அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சங்களை கடுமையாக மதிப்பிழப்பு செய்துவிட்டு, அரசமைப்புச் சட்ட தினத்தை மத்திய அரசு கடைப்பிடிப்பது ‘மிகப் பெரும் பாசாங்குத்தனம்’. அரசமைப்புச் சட்டம் அனைவருக்கும் உத்தரவாதமளிக்கும் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதற்கு எதிா்ப்பை பதிவு செய்யும் வகையிலேயே, நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசமைப்புச் சட்ட சாசன தின நிகழ்ச்சியை எதிா்க்கட்சிகள் புறக்கணித்தன. மத்திய அரசின் இந்தக் கொடூரமான நடைமுறையை எதிா்த்து முறியடிப்போம்’ என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT