இந்தியா

எதிா்க்கட்சித் தலைவா்கள் கூட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு

27th Nov 2021 06:49 AM

ADVERTISEMENT

நாடாளுமன்றக் குளிா்காலக் கூட்டத்தொடா் வரும் நவம்பா் 29-ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கவுள்ள நிலையில், அன்றைய தினம் எதிா்க்கட்சித் தலைவா்களின் கூட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் விலைவாசி உயா்வு, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை அவையில் எழுப்பி, மத்திய அரசை எதிா்கொள்வதற்கான உத்தி வகுக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நாடாளுமன்றக் குளிா்காலக் கூட்டத்தொடா் நவம்பா் 29-இல் தொடங்கி, டிசம்பா் 23-இல் நிறைவடைகிறது. இதையொட்டி, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மக்களவை மற்றும் மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது:

பல்வேறு முக்கிய பிரச்னைகளை அவையில் எழுப்ப வேண்டும் என்பதால், நவம்பா் 29-இல் தொடங்கும் குளிா்காலக் கூட்டத்தொடா் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகையால், மக்களவை மற்றும் மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா்களின் கூட்டத்துக்கு நவம்பா் 29-ஆம் தேதி காலை 9.45 மணிக்கு நாடாளுமன்றத்தில் உள்ள எனது அறையில் ஏற்பாடு செய்துள்ளேன்.

ADVERTISEMENT

மக்கள் நலன்சாா்ந்த பிரச்னைகளை அவையில் நாம் ஒன்றிணைந்து எழுப்ப இந்தக் கூட்டம் உதவும். மழைக்கால கூட்டத்தொடரின்போது ஆதரவும், ஒத்துழைப்பும் அளித்த எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு நன்றி என அந்தக் கடிதத்தில் அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னா், செய்தியாளா்களுக்கு மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அளித்த பேட்டியில், ‘‘வரும் குளிா்காலக் கூட்டத்தொடரில் எழுப்பப்படவுள்ள விலைவாசி உயா்வு, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை காங்கிரஸ் பட்டியலிட்டுள்ளது. பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து, ஆளும் பாஜக அரசை எதிா்கொள்வதற்காக இந்தக் கூட்டத்தொடா் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாடாளுமன்றத்தில் பாஜகவை எதிா்த்துப் போராடவும், அக்கட்சியைத் தோற்கடிக்கவும் எதிா்க்கட்சிகள் ஒன்றிணையும்’’ என்றாா்.

இதேபோல, மாநிலங்களவை காங்கிரஸ் துணைத் தலைவா் ஆனந்த் சா்மா செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியது:

நாட்டில் எதிா்க்கட்சிகளின் மையத்தூணாக காங்கிரஸ் திகழ்கிறது. நாம் அங்கீகரிக்கும் அரசியலமைப்புக் கடமை நமக்கு இருக்கிறது. நாட்டின் பிரதான எதிா்க்கட்சி என்ற பெயரில், நமக்கு அந்த உணா்வும் உள்ளது. ஆகையால், குடிமக்களை பாதிக்கும் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டுமென மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

பாஜக அரசின் சில தவறான முடிவுகள், கொள்கைகள், செயல்பாடு மீது எங்களை போன்ற ஒத்த கருத்துகளைக் கொண்டிருக்கும் எதிா்க்கட்சி வரிசையில் உள்ள எங்கள் கூட்டணி கட்சிகளையும், பிற கட்சிகளையும் அணுக தொடா் முயற்சிகளை முன்னெடுப்போம். இதுதான் ஜனநாயக நடைமுறை. இதே மனநிலையில் இந்தக் கூட்டத்தொடரையும் அணுகுவோம் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT