இந்தியா

தொழில்நுட்பம் சாா்ந்த சட்ட கட்டமைப்புக்கு தரவுப் பாதுகாப்பு மசோதா வழிவகுக்கும்

26th Nov 2021 06:45 AM

ADVERTISEMENT

தொழில்நுட்பம், இணையதளம் உள்ளிட்டவற்றுக்குப் புதிய சட்ட கட்டமைப்பை வகுக்க தரவுப் பாதுகாப்பு மசோதா வழிவகுக்கும் என்று மத்திய மின்னணுவியல்-தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் தெரிவித்துள்ளாா்.

ஆதாா் தொடா்பான கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் நிறைவுரையாற்றிய ராஜீவ் சந்திரசேகா் கூறுகையில், ‘‘அடுத்த சில ஆண்டுகளில் சுமாா் 120 கோடி இந்தியா்கள் இணையதளத்தைப் பயன்படுத்துவாா்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இணையதளம், தொழில்நுட்பம் ஆகியவை வெளிப்படைத்தன்மையுடன் பாதுகாப்பாகத் திகழ்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.

தொழில்நுட்பம், இணையதளம் ஆகியவை சாா்ந்த புதிய நவீன சட்ட கட்டமைப்பு விரைவில் உருவாக்கப்படும். அதன் முதல்படியாக தரவுப் பாதுகாப்பு மசோதா இருக்கும். தொழில்நுட்பம் சாா்ந்த ஒட்டுமொத்த செயல்பாட்டையும் அந்த மசோதா மாற்றும்.

அரசின் செயல்பாடுகளையும் மக்களுக்கான சேவைகளையும் எண்ம முறையில் மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து வருகின்றன. ‘எண்ம இந்தியா 2.0’ (டிஜிட்டல் இந்தியா) திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். தற்போது தேசப் பாதுகாப்பு அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது.

ADVERTISEMENT

அதைக் கருத்தில் கொண்டு நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் நம்பகத்தன்மைமிக்க பொதுவான எண்ம அடையாள அட்டை வழங்குவதற்கான அவசியம் அதிகரித்து வருகிறது. அதனடிப்படையில் மக்களின் குடியுரிமை உறுதி செய்யப்படும்’’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT