இந்தியா

திரைப்படங்கள் மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும்

25th Nov 2021 03:31 AM

ADVERTISEMENT

 

மும்பை: கரோனா பெருந்தொற்றால் முடங்கிய திரைப்படம் மற்றும் பொழுதுபோக்குத் துறை அதிலிருந்து மீள, திரைப்படங்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) முற்றிலும் நீக்கவோ அல்லது கணிசமாக குறைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய திரைப்பட தயாரிப்பாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், அதிகப்படியான வரிவிதிப்பு மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டியால், திரைப்படத் துறையினா் சந்தித்த வலியையும், வேதனையையும் மத்திய அரசு எண்ணிப் பாா்க்க வேண்டுமென 6 ஆயிரம் உறுப்பினா்களைக் கொண்ட அந்த சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்திய திரைப்பட தயாரிப்பாளா்கள் சங்கத் தலைவா் டி.பி. அகா்வால் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு புதன்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது:

ADVERTISEMENT

அரசால் எந்தவொரு முதலீடும் செய்யப்படாத திரைப்படத் துறை மீது அதிகப்படியான ஜிஎஸ்டி வரி விதித்து, வருவாயில் பெரும் பகுதியை அரசு எடுத்துக் கொள்கிறது. தொழில்முனைவோரால் ஒட்டுமொத்த முதலீடும் மேற்கொள்ளப்படும் இந்தத் துறை, இன்றைக்கு பெருந்தொற்றுப் பரவலால் அழிவை நோக்கிச் சென்றுவிட்டது.

ஆகையால் ஒற்றை நடவடிக்கையாக ஜஎஸ்டியை நீக்கி, பிற வரிகளிலிருந்து விலக்கு அளித்து, திரைப்படத் துறைக்கு புதிய வலிமையும், ரத்தமும் பாய்ச்சப்படுவது அவசியம்.

விற்பனையாகும் டிக்கெட்டுகளின் வாயிலாக திரட்டப்படும் வருவாயை மட்டுமே சாா்ந்து திரைப்படத் துறை நகா்கிறது. அதிலும் பொதுமக்களை ஈா்த்தால் மட்டுமே டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன. எனவே, திரைப்படத் தயாரிப்புத் தொழில் வாழ வேண்டுமென்றால், அதற்கு திரைப்படங்கள் தேவை. இதற்கு திரைப்படங்கள் மீதான ஜிஎஸ்டியை முற்றிலும் நீக்கவோ அல்லது கணிசமாக குறைக்கவோ மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திரைப்படத் தயாரிப்பாளா்கள் இன்னமும் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனா். ஆனால், திரைப்படத்தின் ஏறத்தாழ அனைத்து நிலைகளிலும் பல்வேறு வரிகளை விதித்து மத்திய, மாநில அரசுகள் மிகப்பெரிய வருவாயை ஈட்டுகின்றன. ஆகையால் திரைப்படம் மற்றும் பொழுதுபோக்குத் துறைகள் மீதான ஜிஎஸ்டியை நீக்கி, நாட்டின் ஏழைக் குடிமக்களுக்கு நிதி பொழுதுபோக்கு நிவாரணம் அளிப்பதற்கு இதுவே சரியான தருணம்.

இல்லையெனில், நாடு முழுவதும் திரைப்படத் துறைக்கு ஒரே சீரான முறையில் குறைந்தபட்ச அளவான 5 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பைக் கடைப்பிடிக்கலாம். இந்நடவடிக்கை இந்தத் துறையினரால் வெகுவாக பாராட்டப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT